cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

எஸ்தர் கவிதைகள்

எஸ்தர்
Written by எஸ்தர்

நான் தேயிலைப் பச்சையில்
வெள்ளை வெயிலில்
உடல் கறுத்தவள்
எல்லா பக்கத்திலிருந்து பார்த்தாலும்
தனித்து நிற்கும்
சிவனொளிபாத மலை தெரியும்
தோட்டத்தில் முளைத்தவள்
தேயிச்சாயமும் ரொட்டியும்
என் பூர்வீக உணவு
கூடையும் வறுமையும்
எங்கள் பூர்வீகச் சொத்து
லயமும் தொல்லையும்
கூடவே வரும் நிழல்
மலைக்காடுகளில் மிக ஆழத்தில் புதைத்து விட்டார்கள்
எங்களைப்
புல்லுக்கட்டோடு கரும்பையும் கடித்துக்கொண்டு
தேயிலை நிரையில்
வந்துகொண்டிருக்கிறேன்
தாத்தாவின் மாடுகளின் பசி தீர்க்க
கறுத்த காலோடு கூட வருகிறது அட்டை அட்டைக்கு
இரத்தமும்
மாடுகளுக்குப் புல்லும்
அதனதன் பசி போக்கட்டும்


என்னிடம் ஏதாவது கேள்

தற்கு
ஒரு கடன்காரனைப் போல்
தயங்கித் தயங்கி ஏதோ கேட்க முனைகிறாய்

முகமலை இராணுவ
முகாமை கடப்பதுபோலவே
என் வீட்டைப் பதற்றத்துடன்
கடக்கிறாய்

என்னிடம் எதைக் கேட்கப்
போகிறாய் ?
புத்தனின் போதி மரமாய் கூடவே
இருக்கும்
கவலைகளை நீ கேட்கப்போகிறாயா
அன்றில்
உருவிய உடைவாள் போன்ற
இவ் உடலையா?

எல்லாமே நீ கண்ணீரோடு
என் கதவைத் தட்டி
இறுக்கமாகத் தழுவும்
என் கவிதைகளைப் போன்றது.

தயவு செய்து

எதாவது என்னிடம் கேள்….


நீண்ட மௌனம் கரையும் காகத்தால் கலைந்தது
இப்போது பெய்ய ஆயத்தமாகும்
ஒரு கார்முகிலின் மழை நீரில்
எந்த துளி நீ, எந்த துளி நான்

ஒரு சிகரெட்டை பற்றவைத்து
ஜன்னலின் அருகே வருகின்றேன்
முதல் புகையில் மழை பெய்கிறது.

இரண்டாம் புகையில் நீ நனைகிறாய்.

மூன்றாம் புகையில் நுரையீரலை ஆக்கிரமிக்கும்
நிக்கோட்டின் பள்ளத்தாக்குகளில் இறங்குகிறாய்.

மழையின் வேகம் குறையவில்லை
ஜன்னலின் சாளரங்கள் நனைந்து வழிகிறது.

கடைசி துளிகளிலும் நீயில்லையே
இதோ இப்போது கையைச் சுடுகிறது
கடைசி நெருப்பு.


Courtesy : Painting – behance.net

About the author

எஸ்தர்

எஸ்தர்

இலங்கையின் மலையக மண்ணைச் சேர்ந்தவர் எஸ்தர் . மலையகத்தில் அட்டன் – டிக்கோயாவை பிறப்பிடமாகவும் திருகோண மலையை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் உயர்கல்வியையும் பெற்று; பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் கலைமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியலில் டிப்ளோமாவையும் முடித்து தற்போது இலங்கை அரசின் முக்கிய பதவியில் பணியாற்றுகிறார்.

சென்னை – போதிவனம் பதிப்பகம் வெளியிட்ட இவரின் முதல் கவிதைத் தொகுப்பான“கால் பட்டு உடைந்தது வானம்” ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்தவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு “பெரு மலை வெடிப்புகள்” பூபாளம் புத்தகப் பண்ணை பதிப்பகம் மூலமாக வெளியானது. இலங்கையின் மலையகத் தமிழர்களின் சவால் மிகுந்த வாழ்வியலையும் வலிகளையும் அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் “பெரு மலை வெடிப்புகள்” தொகுப்பிலுள்ள கவிதைகளின் கருப்பொருளாக உள்ளன.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
துரை. அறிவழகன்

தேயிலைப் பச்சை வாசத்தின் அடித்தளத்தில் உறைந்து இருக்கும் மலையகத் தொழிலாளிகளின் ஒற்றைக் குரலாய் ஒலிக்கிறது எஸ்தர் அவர்களின் குரல். தேயிலை வாசத்தில் உறைந்தபடி இரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சியாக மனதை ஈர்க்கும் மொழி. எஸ்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Esther

நன்றியும்அன்பும் துரை

You cannot copy content of this Website