cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 கவிதைகள்

கலிதீரா விடாய்


அந்த மழைநாளில் சந்தித்துக் கொண்டோம்
இதயங்களை நனைத்தபடி
நேசம் பூத்துக் குலுங்கிற்று
கையிலிருந்த ஒற்றைரோஜா
வெட்கித் தலைகுனிந்தது..

சூரிய முகட்டில்
செழுமையான பானம்
ஏகாந்தச் சூட்டில் உருகும் காலம்
பேச்சிழந்து மௌனம் தின்னும்
உருச்சிறுத்த கடுகாம்
யாக்கைகள் கொண்டோம்
பிரியக்குடுவைகளை பரிமாறிக்கொண்டோம்

திசைகளெல்லாம் கவிந்து
தேசமெல்லாம் அழிந்து
யுகங்களில் பிறந்து
நொடிக்குள் உழன்று
நரம்புகளில் விதியெழுதி
நேரவரையில்லா நேசத்தில்

சங்கமித்த உள்ளங்கள்
சாத்வீகத்தின் பேரெழிலில்
பெருஞ்சலனம் விழுங்கிய நதியின் மௌனமாய்
அந்தியின் தீஞ்சுடர்த்தரிசனம்
ஏந்திக்கொள்ளும்

ஒப்பனைகளற்ற பெருநேசம்
ஆன்மப்புரவிகளில் ஏறி
ஆகாயங்கள் தாண்டி ஆழ்ந்தமிழ்ந்து அகண்டவெளி
நோக்கி நகர்ந்து
புதியதோர் செழிப்பினைப் புலப்படுத்திப் பூரிக்கும்

நேசப்பரிமாற்றத்தின் நித்தியகூண்டினுள்
அகப்பட்டன இரு உள்ளங்கள்
சிறைப்பட்டன உயிர்த்தீபங்கள்
அடிமைத்தனத்திற்காகவே
ஆண்டாண்டு காலமும்
களிநடனம் புரியக்காத்துக்கிடந்தன
கலிதீரா விடாயோடு
காதலின் கலசமேந்திய
கயலினம் நான்கு..!!


 

About the author

Dr. ஜலீலா முஸம்மில் .

Dr. ஜலீலா முஸம்மில் .

இலங்கை நாடு ஏறாவூர் நகரில் வைத்திய அதிகாரியாகப் பணிபுரியும் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்கள் இதுவரை மூன்று நூல்களை வெளியீடு செய்துள்ளார்.
1) சிறகு முளைத்த மீன் -புதுக்கவிதை நூல்,
2)தூரிகை வரையும் மின்மினிகள்-ஹைக்கூ கவிதை நூல் ,
3) மஞ்சள் மாம்பூ - ஹைக்கூ கவிதை நூல்).

இலக்கியப் பணியில் மிகவும் ஆர்வத்துடன் செயல்படும் இவர் பல்வேறுபட்ட விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இலங்கை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் 2023ஆம் ஆண்டுக்கான இளங்கலைஞர் விருது பெற்றவர். அண்மையில் மதுரை மாநகரில் இடம்பெற்ற மூன்றாவது தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டில் ஹைக்கூ பேரொளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website