அக வேரின் லயிப்பு.
தாகம்
தணிக்க கிடைக்கும்
தண்ணீருக்காக
நீங்களும்
நானும்
எந்தப் பிரயத்தனமும் படவில்லை
பல்லுயிரிகளின்
பலனுக்கான
வானப் பொழிதலுக்கு.
சூழ்ந்திருக்கும்
காற்றை
சுவாசிப்பதும்
கை மீறித்தான்
நடக்கிறது
யாதொரு
கையுழைப்பும் இல்லாமல்
எப்பொழுதும்
அனுசரனையாக.
தேடி வரும்
மேகமும்
திசையற்று
கடந்து வரும்
காற்றும்
என்ன பெற்றது
நாம்
உயிர் துடிப்போடு
பயணிப்பதற்கு
கூலியாகவோ
கொடையாகவோ
முடிந்த மட்டும்
கழிவாக்கியதன் கவனமற்ற பொழுதிலும்
கையூட்டாக.
நிராகரிப்பின்
நிந்தனைகள்
பிடித்தாட்டாது
எப்பொழுதும்
பேயாக
உருமாறி.
நல்லறம் விதைப்பது
அன்றாடங்களில்
அணுக்கமாகிவிட்டதால்.
உதாசீனங்களின்
சிறு
சமிக்ஞையொலி கூட
செவியைக் கடந்து
சிந்தைக்கு போவதில்லை
அறப்புரிதலின்
இயல்பென
பரிவுகள் மிகைத்த
பயணத் தெளிவில்
வாழுமாசை மேவுவதால்.
***
சாதுர்ய வழுக்கல்.
வரவுகள் அற்றுப்போனதை
உறுதிகள் செய்தது
வாசனைகளற்ற
டப்பாக்கள்
சமையலறையில்
விசும்பலை ஏற்படுத்தி.
அலுப்புகள் தீர
குடித்தவன்
அடுக்கலைப் பக்கம்
வரவே இல்லை
சுடுகாட்டு பசிக்கு
சோறாகிப்போனதால்.
நியாய விலைக்கடையால்
நித்திய சுகம்
காண முடியாதுதான்
முந்தானைக்குள்
முடங்கிய பிள்ளைகளை
முன்னேற்ற.
பொறுப்பற்றவனால்
வாய்த்திட்ட
போராட்ட வாழ்க்கையில்
என்னவாகப்போகிறாள்
என்ற
கவலைகள்
இருக்கிறது
பிசிறு மனிதர்களுக்குள்
பல
பேய்கள் குடி கொண்டிருப்பதால்.
***
நீந்த மறந்த நிஜம்.
விழுந்த வார்த்தைகளின்
விசப் பிறீட்டின்
கவுச்சி ஆற்றில்
கரிசன துடுப்புகள் கரையேற்றிவிட துடிக்கிறது
அறியாமைக்குள்
அரவணைத்து
சுய லாபம் பெற
தத்தளிக்கும்
இயலாமையைப் பயன்படுத்தி.
பேரவலத்தின் பெருந்துயராக
மீனென நம்ப வைக்க
பிரயத்தனப் பாடுகள்
படத்தான் வேண்டியதாக உள்ளது
நீச்சலடிக்க
நெருப்பு வார்த்தைகளைக்
கூறி.
***
மாசறு மகோன்னதம்.
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காதுபோன
உன் அருகாமையின்
இழப்புகள்
பொருட்டில்லாமல் போகிறது
மனப் பிசகென
மற்றவர்கள்
நகைக்க.
நிகர் செய்ய முடியாத
நிச்சலன ஈர்ப்பின்
பிரவாக அன்பில்
திளைப்பதைத் தவிர
வேறொன்றும்
செய்யவியழாது
வாட்டும்
தனிமையின்
கோர மனதிடம்.
வழிந்தோடும்
பொழுதுகளில்
பற்றிவிடத் துடிக்கும்
ஆயாசத்தை
வார்த்தைகள் கொண்டு
நிரப்பிட முடியாது
நீயாக மாறி
நித்திலம் பெறுவதைத்தவிர
இப் புறக்கூத்தில்.