ஆறுதலின் உருக்கள்
சதை மலை மேலே
பல எண்ணெய்கள் ஊற்றி
ஒரு சிறு நதியின் கோடாக
உள்ளிறங்கியும், ஆவியாகியும்
எங்கும் பரவி, படரச் செய்து
அனைத்து விரல்களின் வித்தையால் . . .
வாடிக்கையாளரின் உடல் வலியை
அகலச் செய்கிறாள்
ஆரோக்கிய நீரூற்றின் பணிப்பெண்!!
பணி முடிந்ததும், மனையில்
அவள் உடலிற்கும், உள்ளத்திற்குமான
ஆறுதலின் உருக்களை அருள்கிறது
முதுகில் தவழும் அவளின் குழந்தையின்
மென்பட்டு பாதங்கள்
வரைந்த கோட்டோவியம்!!
♦♦♦♦♦♦
நினைவு பறவை
குளிரூட்டப்பட்ட மாடிப்பேருந்தின்
இருக்கையில் அமரும் போது
வெளியே உரசி செல்லும் இலைகள்
தம்மை உரச முடியாதென்ற போதும்
அனிச்சையாய், விலகி அமர்வது போல . . .
சில நினைவுகள்
நம்மை உரசுகையில்
பாதகமில்லை என்றாலும்
எண்ணிப் பார்க்க மறுக்கிறது மனம்!!
வடுக்களை ஏற்படுத்திய ரணம்
என்பதாலேயே!!
♦♦♦♦♦♦
கசப்பின் கணங்கள்
கடைக்கண் பார்வைக்கு
காத்திருக்கும் காதலன் என
காத்திருக்கிறாள் மூதாட்டி
தாதியின் விழியசைவிற்கு!
நீர்மையின் கால் படாத இலை
தலை கவிழ்வதுப் போல
அவள் உடல் களைத்து வாடியிருப்பினும்
தாதியின் கனிவான சிரிப்பை
கணமேனும் ஏந்திவிட
அவள் மனம் ஏங்குகிறது!
மகனும், மருமகளும் இருந்தும்
தனிமையின் கருணையற்ற கணங்களில்
முதியவள் சுவாசிக்கும்
கசப்பை அறிந்தப் பணிப்பெண்
அழைப்புப் பலகையில்
அவர்கள் எண் மின்னியதும்
சக்கர நாற்காலியை
வேகமாக தள்ளிச் செல்கிறாள்
மரணத்தின் விளிம்பில் இருக்கும் செடிகளை
உயிர்தெழச் செய்யும் வைராக்கியம்
கொண்டவளைப் போல!
♦♦♦♦♦♦
கையறு நிலை
கோலங்களுக்குள்
சிக்கிக் கொண்ட
குடும்பங்களின்
அன்புடைப் பெண்டிர்
கூந்தலின் நுனி
உலர்த்தும் அவசரப்
பொழுதுகளிலெல்லாம்
துவராடை அணியவொன்னா
சூழலின் போதாமையை
வெறுக்கின்றனர் இதயம் நொந்து!!!