காத்திருந்தே ஆகவேண்டிய தருணத்தில்
இலக்கற்ற காலத்தை வைத்து
சூதாடத் துவங்கினோம்
வரவேற்பு மேசையின் மேலே
தன்னையே சுற்றும் பறவையென
சுழன்ற நொடிமுள்ளுடன்…
விரயமாகிக் கொண்டிருக்கும் காலத்தை
காலடியிலிட்டு நசுக்கியபடி மெல்லொலி எழுப்பிய
கொலுசிசையைக் காட்டிலும்
அருகிருந்த என் கரத்தை
பியானோ கட்டைகளாக்கி
நீ வாசித்தபடியிருக்கிற
பிறர் கேளா இசையே
பேரானந்தம்.
தூரத்தில் பொழியும் மேகம் பார்த்து
அது காற்சட்டையெனவும்
அதற்குள் கால்நுழைத்து
நிலமிறங்குகிறது மழையென்றாள் பாட்டி
ஏனோ அக்கணம்
என்றோ
மழையென்பது கடவுள் கழிக்கும் சிறுநீரெனத்
தாத்தா சொன்னதும் நினைவுக்கு வர
அன்று நான் மழையில் நனையவேயில்லை.
கால்கள் பரப்பி அடைத்துக் கொண்டு
படுத்துக் கிடக்கிறதொரு பகற்கனா
பணிகளிருப்பதாய் அதட்டியும்
அசைவதாயில்லை
புரளக் கூட மறுத்து அழிச்சாட்டியம்
கொஞ்சம் இடங்கொடுத்தால் இப்படித்தான்
‘இருஇரு’வெனப் பொறுமிக் கொண்டான்
கோபம் வருகையிலெல்லாம்
உறங்கிடும் வழக்கமுடைய அவன்.
நிலந்தீண்டா நிழலென
தனக்கான சுருதியில்
தன் ராகத்தை இசைத்தபடியே மரணம்
வாழ்வதன் சுருதியில்…
சில திருப்பங்களில் புணர முனைந்து
அபசுவரங்களாய் பிசுபிசுத்திட
ஏதோ ஓர் மழையிரவின் குளிர் நொடியில்
எங்கோ ஓர் அகால விபத்தில்
வாழ்ந்து சலித்த பழுத்த இலையுதிர்வில்
உயிர்த்திருக்கும் ஆசை இறுதியாய் வடிகின்ற கணத்தில்
சுருதிகள் முயங்கும்.