- நடை
ரயில் நிலைய இருக்கையில்
அவ்வளவு நேரம் ஜோடியாய்
அமர்ந்துப் பேசியவர்கள்
இப்போது
எழுந்து நடக்கத் தொடங்கினர்.
கரங்கள் பற்றி
தோள்கள் உரசி
தலைச் சாய்த்து
சிரித்துக் கொண்டே
அவர்கள்
நடந்தபோதுதான்
நாம் இப்படி
ஒருநாளும்
நடந்ததே இல்லை என்பது
நெஞ்சில் உரைத்தது.
நம் சந்திப்புகள்
எப்போதும்
அமர்ந்தே இருக்கின்றன.
எழுந்து
அதை நடக்க விட வேண்டும்.
மலர்கள் நிறைந்த சாலையில்
ஏதோவொரு மரத்தின் அடியில்
நடக்கும் போது
உன் தலைச் சாய்த்து
நீ சிரிக்க வேண்டும்.
அப்போது
உன் தலையில்
மலர்கள் விழ வேண்டும்.
ஒரு நடைக்குதான்
எவ்வளவு உயரம்
எத்தனைச் சிறகுகள் !
****
- பெயர் மலர்
தேவாலய வாசலில்
கூட்டுப் பிரார்த்தனையில்
அமர்ந்து
தேவனைத் துதிப் பாடிக் கொண்டே
மணலில் ஒரு பெயரைக் கிறுக்கி
ஆழப் பூட்டி வைத்து விட்டாள்.
அந்தப் பெயர்
மூச்சுமுட்ட மண்ணுள் கிடந்தது.
தேவன்
அப்பெயருக்காகவே மழைப் பொழிகிறார்.
செடியாய் முளைத்து
பூக்கத் தொடங்கிய
அப் பெயரை
அவள் பறித்துச் சூடும் வரை
பூவாய்
மணமாய்
வேராய்
அங்கேயே
ஒற்றைக்காலில் நிற்கும்.
அதுவரை தேவன் மழை அளப்பார்!
****
- பலவிதம்
என் கையில்
ததும்பி நிற்கும் குளத்தில்
ஆறு கால்களையும்
உதைத்தபடிக்
கிடக்கிறது எறும்பு.
சட்டெனக்
குளத்தைக் கைவிட்டு
எறும்பை ரட்சித்தேன்.
போகட்டும்
நேற்றுக் கடலையே
தியாகம் செய்தவனுக்கு
இத் தியாகம்
ஒரு
சிறிதினும் சிறிது!
****
- பதம்
இன்று
அவரின் நினைவுநாளுக்காக
ஒருவர்
தனது அலைபேசியில்
நிலைத்தகவல் வைத்து இருந்தார்.
அதைப் பார்த்ததும்
அவருக்காக நானும் வருந்தினேன்.
இவ்வளவு நாட்களாக
நினைவில்
அவர்
ஏன் இல்லாமல் இருந்தார்!?
என்னை எங்கு கண்டாலும்
அவ்வளவு வாஞ்சையாக நலம் விசாரிப்பார்.
அன்பை ,
சிறு தூறலுக்கு
நனைந்த முகத்தை ஒத்துவது போல்
பதமாகக் காட்டுபவர்.
கூடவும் இல்லாத
குறைவும் இல்லாத
அந்தப் பதம்
இப்போதும் கூட முகத்தை வருடுகிறது.
இந்த பதத்துக்குமாகவே
தினமும்
சிறு தூறல் வரவேண்டும்.
****
- வெள்ளம்
மழை பெய்து
கரை உடைந்து
ஈரம்
நசிந்துக் கிடக்கும்
நதியின் ஓரத்தில்
விரல்
வழுக்கி விழுபவனை
குழிக்குள் விழும் தவளையை இழுக்கும்
இன்னுமொரு தவளையின் கால்களாகிறது
அவளின் கைகள்.
காற்றில்
அசையும் கொடியென
கைவிரல் ஸ்பரிசத்தில்
கூச்செறிந்து
உயிர் நடுநடுங்குகிறது.
பொய்கைக்குள் மூழ்கிய விரல்
தாமரைத் தண்டாகிறது
விரிந்த மலராகிறது உடல்
மலரின் இதழ்களை
விரல்கள் கோத
புதுவெள்ளம் பொங்கத் தொடங்குகிறது.
உடலெங்கும்
நாணல் புற்கள் விளைந்து அசைகின்றன
பசி மிகுந்த கால்நடையென
நாக்குகள்
அதனை மேய்கின்றன.
உதடுகள்
தானாக
பெயர்தனை ஜெபிக்கின்றன.
சாட்சியாக
மேற்கில் வானம் கறுத்து
பெருமழைப் பொழிகிறது.
கூதல் கூட
அவளின் கரங்களுக்கு
தாய்மை எண்ணம் மேலிட
அவனை ஆறுதலாக
அழைத்து
அணைத்துக் கொள்கின்றன.
அந்த இரவு
இருவரின் கனவிலும்
ஒரே நிலா
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களோடு.
Courtesy -> Art : Junya Art Gallery
சிறப்பு சரவணன். இன்னும் வீரியமாக எழுதுங்கள்.
சிறப்பு தோழர் ஸ்டாலின்
மகிழ்ச்சி பாராட்டுகள்
இளங்குமரன், திருச்சி.