அம்ம அறியான்
காங்கிரீட் காடுகளில் பறக்கும் பட்டாம்பூச்சிகள்
காடுகளில் காண்பதைவிடவும்
அதிக வண்ணங்களைக் காண்கின்றன
காங்கிரீட் காடுகளில் பறந்தலையும் பட்டாம்பூச்சிகள்
சோலைகளில் சுவைப்பதை விடவும்
பலவகை இனிப்புகளைச் சுவைக்கின்றன
காங்கிரீட் காடுகளில் பறந்தலைந்தாழும் பட்டாம்பூச்சிகள்
வனவாசத்தில் முகர்வதை விடவும்
பல வாசங்களை முகர்ந்துய்க்கின்றன
காங்கிரீட் காடுகளில் தரையிரங்கும் பட்டாம்பூச்சிகள்
கானக மண்மெத்தையில் பட்டறியா வெம்மையில் வெதும்பி
சட்டென உயரப் பறக்கின்றன
காங்கிரீட் காடுகளில் விரைந்து பறந்தலையும் பட்டாம்பூச்சிகள்
காகங்களிடமிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சிறகசைத்து
விரைந்து வரும் காரின்
விரைபோன்ற விரைப்பான கண்ணாடியின் மீது மோதி
உயிர்ச்சிறகிழக்கின்றன
இப்படி
அப்படிப்
பலபடி
ஜன்னலில் மாட்டியிருக்கும் மைக்க்கள்ஜாக்சனிய கோட்டின்
குளிர்ந்த இரும்பு மெடலின் மீது
வீற்றிருக்கிறது இந்திய ரெட் அட்மிரல்
ஜன்னலுக்கு வெளியில்
முருங்கைமரத்தில் தவச்சிறகை வளர்த்துக்கொண்டிருக்கிறது
அதன் வாரிசு
இவற்றைக் கண்ணுற்றபடி
கவலைச்சிந்தனையிலாழ்ந்திருக்கிறேன் நான்
இப்படி
அப்படிப்
பலபடிகளைப் பற்றி
எப்படிப் பகர்வதென்று
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
தெருவே தூக்கத்திலும்
அரைத்தூக்கத்திலும் அசையும் போது
மெல்லத் துயிலெழுகிறாள்
கடைசியாக உறங்கச் சென்றவள்
கிழக்கு கடற்கரைச் சாலையில்
ஓங்கி உலகளக்கும்
உத்தம மாளிகையின்
13ஆவது மாடியில்
துடிக்கத் துடிக்க தொடர்கிறது
அடங்காக் காமம்
மூச்சு முட்ட முட்ட
படர்கிறது மாலையிளங்கதிர்
தங்கம் போல்
தகதகக்கின்றன
தகிக்குமுலோகமொத்த உடல்கள்
புத்தம்புது மாளிகையின்
பெண்ட்ஹவுசில்
குட்டித்தூக்கம் போடும்
சிந்துவின் கனவில்
ஆயிரம் கடவுள்களைக் கடந்து
ஆயிரமாயிரம் சாத்தான்களைத் தாண்டி
துலக்கமாக ஒளிர்கிறது
மாமாவின் முகம்
அவள் மெல்ல நக
ஊர்திரும்பும் கார்கள்
ஒழுங்கின்றி நிற்கும்
விரிபெருநகர உணவகத்தில்
காபியை குடிக்க
முகத்திரையை விலக்குகிறாள் மெஹ்ருன்னிசா
நூற்றாண்டுகள் காற்றில் கரைய
நாசியில் நுழைந்து
நரம்புகளைக் கிளர்த்துகிறது
காபியின் கந்தர்வமணம்
கசகசக்கும் ஒண்டுக்குடித்தனத்தில்
கட்டிலின் மேல் உறங்கும் மகள்
விழித்து விட்டாளா என்று எழுந்து பார்க்கும் கிருஷ்ணவேணி
ஆசுவாசம் அடைந்து
தன் ஆடைகளை சரிசெய்துகொண்டு
பட்டுப்போன்ற மென்மையுடன் முத்தமிடுகிறாள்
பக்கத்தில் படுத்திருக்கும் கணவனை
அவன் புரண்டு படுத்து
ம் என்று முனகி
தூக்கத்தைத் தொடர்வதைக் கண்டு
மாயக்குறுநகை பூக்க
பால்குக்கர் விசில் அடிக்கிறது
தூரத்தில் எங்கோ
குழந்தை அழும் சத்தம் கேட்கிறது
கூடவே
அனிருத்தின் பாடல் ஒலிக்கிறது
அசந்தர்ப்பமாய்
சோம்பலாக ஊரும் பாம்பைப் போல
பருவகாலத்தின் முதல் மழை
மேலே படும் முதல் துளி
ஆவியாகிறது
உள்ளிருக்கும் வெப்பத்தால்
கண்கள் கிறுகிறுக்கின்றன
உடல் எடையற்றுப் போகிறது
மனம்
திசையற்று
தசைகள்
தளர்கின்றன
மலர்கின்றன
அலைகின்றன
கட்டைவிரலை நீர்த்துளி தாக்கும்போது
கழுத்தாம்பட்டையில் சிலிர்க்கிறது
நெற்றியிலிருந்து வழியும் மழைநீர்
கண்களில் இறங்கி
செம்புலப் பெயர்ச்சி கொள்கிறது
காதுமடலைத் தழுவி
பின்புறம் இறங்கும் நீர்
கனவின் நரம்புகளை மீட்டி
கழுத்தைச் சுற்றி இறங்கி
நெஞ்சில் நிறைய
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன
தொடையில் இறங்கும் நீர்
உடையின் நினைவழிக்கின்றது
கெண்டைக்காலில் நழுவும் போது
கால் கட்டைவிரல் விடைக்கிறது
பாதங்கள் நனைய நனைய
உச்சி குளிர்கிறது
மூன்றாம் நிமிடத்தில்
உடலெங்கும்
மீண்டும் சூடு பற்றுகிறது
மழைக்கு முந்தைய தீவட்டி போலன்றி
மெல்லிய அகலின் விளக்காக
நனைந்தசைந்தூர்ந்து
கரையாது கரைந்து
வீடேகுகையில்
தடம் போட்டுத் தொடரும்
ஈர உடையகற்றி
தலை துவட்டி
உடல் துடைத்து
மெல்லுடை சூடி
இருக்கையில் மெல்லச் சாய்கையில்
கண்டறியாக் காடெங்கும் பசுமை நிறைய
தெள்ளிய நீல வானில்
வட்டமிடுகிறது
அண்டரண்டப் பறவையொன்று
அமைதியாக
அழகாக
ஆனந்தமாக
பூனை புராணம்
வழக்கம்போல்
நள்ளிரவில்
மொட்டைமாடியில் உலவச்சென்றது
பூனை
அங்கு மோகினிகளும் பிரம்மராட்சசனும்
சயனித்திருப்பதை அறியாமல்
தலா இரண்டு கண்கள்
அதன் கால்களைக் கவ்வின
குறைவதை ஈடு செய்ய
கடிக்கப்பட்டன காதுகள்
கால் எலும்புகள் கடிக்கப்பட்டு
உறிஞ்சப்பட்டது மஜ்ஜை
கால்சியம் குறைபாட்டைத் தீர்க்க
இரண்டாய்ப் பகிரப்பட்டன
எலும்புகள்
பற்களின் கால்சியம்
பரிவுடன் படைக்கப்பட்டது
ஞானப்பல்லில்லா மோகினிக்கு
இதயத்தில் பதிந்த பற்களைக் காட்டிலும்
அதிக வலியைக் கொடுத்தன
மீசை மயிர்கள்
எஞ்சிய உறுப்புக்களை
எவருண்டாரோ யாரறிவார்
தெறித்துச் சுவரிலொட்டியபடி கண்டு
வெறித்த கண்களைக் கண்டு
வெஞ்சினம் கொண்டவள்
வலது கை ஆள்காட்டிவிரலின்
நகங்கடித்து வீசி
எரித்தாள் அவற்றை
எஞ்சிய தோலைக்கிழித்து
அணிந்து
விழித்தவர்கள்
விடிந்தபின்
வீடுபேறு முடிந்து
வீட்டுக்குச் சென்றனர்
சூடான காபியை அருந்தியபடி
அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருக்க
கைப்பிடி சுவரோரங்களில் இருந்து
காற்றில் பறந்த
பூனையின் முடி ஒன்று
வேறோர் உள்ளங்கையில் ஒட்டி
வளரத்தொடங்கியது
மற்ற முடிகள்
காற்றில் பறந்து
தெருவெங்கும் பறந்தன
மூக்கில் நுழைந்ததாக நினைத்த சில
தும்பினர்
கண்களில் விழுந்ததாய்க் கருதிய சிலர்
கலங்கினர்
காதில் விழுந்ததால்
சிலர் குடைந்துகொண்டிருந்தனர்
வாயில் விழுந்ததால் சிலர்
‘சப்பு’கொட்டிக்கொண்டிருந்தனர்
தொடர்வினையால்
தெரு ஊராகி நாடாகி உலகாக
வாலை ஆட்டியபடி நடந்தனர் அனைவரும்
என்றாலும்
யாருக்கும் தெரியாதென்பதுபோல்
கேட்டுக்கொண்டதே இல்லை
அது
என்ன என்றோ
எப்படி முளைத்ததென்றோ.
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்த பூனையை
காலப்போக்கில்
கடவுளாக்கித் தொழுகின்றனர்.
ஹூ…ம்’ என்பது மந்திரம்;
‘மியாவ்’ என்பது மறைபொருள்.