cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

திருவோடாய்ச் சஞ்சரிக்கும் இரைப்பை


I

பணிநீக்கம் செய்த என்னை
அலுவலகம் வரச் சொல்லிப் பணித்தனர்.
கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்பட்ட கன்று
மீண்டும் தொழுவத்திற்கு ஏனெனக் குழம்பினேன்.
ஓரிரு காலியான இருக்கைகளை
நிரப்பும் பரிசீலனைக் கூட்டமென்றனர்.
ஆம்புலன்ஸின் சுழல் விளக்குகள்
இடைவிடாது ஒலிக்கும் பொது முடக்கக் காலத்தில்
முழு உடலையே முகக் கவசமாக்கி
வழியெங்கும் சானிட்டைசர் தெளித்தபடி
அலுவலகத்தை அடைந்தேன்.
பயோமெட்ரிக் வருகை எந்திரத்தில்
யாரோ ஒருவரின் கட்டை விரல் ரேகைப்பதிவு
தடித்த கண்ணாடிக் கதவினூடே என்னை வரவேற்றது.
அது நான் பணிசெய்த அலுவலகம் போல் இல்லை
முதல்முறை நேர்முகத் தேர்விற்குச் சென்றது போலிருந்தது.
நேர்கோடற்ற வாக்கியங்களையும்
எக்கச்சக்க எழுத்துப் பிழைகளையும் அனுப்பி
என்னுடன் கொட்டு வாங்கிய சக ஊழியர்
இரைப்பையற்ற என் அடிவயிற்றைக் கண்டு அதிர்ச்சியுற்றார்
வறண்ட நிலமாய் வெடித்து விரிசலுற்றது என்றதும்
கண்கள் வெடித்துச் சிதறும்படி வெறித்தார்.
நுழைவு அட்டை நீட்டிய வரவேற்பரைப் பெண்ணை
துப்பாக்கிப் பார்வையால் சுட்டெரித்த
மனித வள அதிகாரி முன்
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள் அமர்ந்தேன்.
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
ஐஸ்கட்டியாய் உறைந்தது பின்னந்தலை.
என் ஒப்புதலுடன் என் உதட்டசைவையும் ஆடியோ பதிவு செய்துகொண்டிருந்தவர்
சற்றென என் அடையாள அட்டையைப் பிடுங்க முயன்றார்.
அதை நெஞ்சோடும் கழுத்தொடும் இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்
என்னிடம் தோல்வியுற்றதாய்க் கருதிய மனித வள அதிகாரி
இறுதியில் என் நெஞ்செலும்பையும் கழுத்து நரம்புகளையும்
ஒடித்து உருவிக்கொண்டார்.
அடையாள அட்டை ஒன்றே போதுமெனத் தப்பியோடினேன்.
என் கொம்பையும் வாலையும் பிடித்து வேள்விச் சுடரில் வீசினர்.
தனித்துப் பரந்த என் கைபேசிக் காணொளியில்
லட்சோப லட்ச மாடுகளின் எரியும் பால்மடிகள்
லட்சோப லட்ச மாடுகளின் எரியும் பால்மடிகள்

II

தன்னைத் திருவோடாய் மாற்றி
சஞ்சரிக்கிறது ஓர் இரைப்பை.
அதில், யாரோ வீசி எறிகிறார்
ஓரிரவில் மதிப்பிழந்த காந்தி நோட்டுகளை
யாரோ சத்தமின்றி வைக்கிறார்
ரத்தக்கறை படிந்த ஆடைகளை
யாரோ தட்டி உறிஞ்சுகிறார்
நல்லி எலும்பின் மஜ்ஜைகளை
கழிப்பறைப் பீங்கானென
யாரோ மலம் கழித்துச் செல்கிறார்
காவிக் கொடியை நெற்றியில் பறக்கவிட்ட இளைஞன்
இது பசுவின் கபாலமெனச் சந்தேகிக்கிறான்
தலைதெறிக்க ஓடிய திருவோட்டின் மீது
யாரோ சாராய ஊறலைக் கவிழ்க்கிறார்
உள்ளூர எரிந்த 53 குடல்களோடு
திருவோட்டையும் எரித்தனர்
அந்தி மாலைச் சூரியனில்.

III

வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை.
பணிநீக்கம் செய்யப்பட்ட நாள் முதலாய்
ஒரு துளி நீரைக் கண்டாலும்
அதில் குதித்து விடவும்
தன் உள்ளங்கை ரேகையைப் பிளந்து
தன்னைத் தலைகீழாய்ப் புதைத்துக் கொள்ளவும்
ஏனோ இடைவிடாது போராடினார்.
மேலும் வீட்டில் உள்ள அத்தனை பேரின் கபாலங்களிலும்
தன் தலையெழுத்தின் இடமதிப்பை அறிய முற்பட்டு
தன் கபாலத்தை அரிந்து அரிந்து வானில் எரிந்துகொண்டிருந்தார்
அதன் தொல்வடிவங்களான
தன் தந்தையின் கபாலத்தை எரிந்த குடிசையின் சாம்பலிலும்
அம்மையின் கபாலத்தை வறண்டு போன நதிப் படுகையிலும் தேடித் தேடி இறுதியில் தன் இரைப்பையைப் பறையாக்கி ஆடினார்.
எங்கள் தொழுவத்துக் கன்றை அவ்வப்போது களவாடிச் சென்று
மலை போல் லட்டை உருட்டிக்
கொழுப்பு போதவில்லை என்னும் ஏழுமலையான்தான்
என் அப்பாவை இறுதியாகப் பார்த்தானாம்.

IV

எம் குழந்தைகளின் இரைப்பையைக் காட்சிக்கு வைத்தேன்
வெந்த தானியங்களின் மிருதுத்தன்மையைப் பரிசளித்தனர்.
அவர்களின் கிழிந்த உடைகளைக் காட்சிக்கு வைத்தேன்
ஊசியையும் நூலையும் பரிசளித்தனர்.
தெருவில் எறியப்பட்ட எங்கள் உடைமைகளைக் காட்சிக்கு வைத்தேன்
பிறை வடிவத் தட்டையும் ஒரு குவளை நீராகாரத்தையும் பரிசளித்தனர்.
வெகுகாலமாய் ரெஸூமைக் காட்சிக்கு வைத்துக்கொண்டிருக்கிறேன்
வெகுகாலமாய்

V

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில்
சிலர் இரைப்பைகளை எடைக்கல்லாக்கினர்.
சிலர் களவு போன சிறுநீரகப் பாதைகளை நோக்கி ஓடினர்
சிலர் தங்களின் முழங்கால்களின் கொதிப்புக்கு எச்சிலுற்றனர்
சிலர் யோனிகளைத் தோண்டிச் சிறுகாயங்களின்றிக் கையளித்தனர்
சிலர் கருப்பைகளை ஒத்திகைக்கு விட்டனர்
சிலர் எஞ்சியிருந்த காலடி மண் காகிதத்திலும் கையொப்பமிட்டனர்.
முலைகள் பிடுங்கப்பட்ட சிலர் கல்முலைகளைப் பொருத்தி
இரண்டுக்குமிடையே சங்கிலிப் பூட்டு போட்டனர்
சிலர் தகனமேடையை வசிப்பிடமாக்கினர்
சிலர் வசிப்பிடங்களைத் தூக்குமேடையாக்கினர்.
ஆனாலும் ஆனாலும், சிலர் வெட்டியெறிந்த கிளைகளை ஊன்றி
அடியாழத்தை வேர்களால் ஊடுருவி பெரும்விருட்சமாகினர்.


  • ஓவியம் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

About the author

பச்சோந்தி

பச்சோந்தி

கவிஞர், பத்திரிகையாளர். இயற்பெயர் இரா.ச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website