cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 36 கவிதைகள்

வினோத் பரமானந்தன் கவிதைகள்


நேற்று தான்
பார்த்தேன் அவனை…
தன்னை கவிஞன்
என்றான்..

காலம் தன்னை
கிழித்துப் போட்டதாகச்
சொல்லி..
ஒரு கவிதை சொன்னான்..
கற்பனையையும்..
கவிதையையும்..
காற்று புகாத ஒரு
பெட்டிக்குள் அடைத்து
காற்றில் வீசினான்
ஞானங்கள் சுமந்த
அவனது அறிவில்
அன்பும் ஜனித்தது…
அன்பு சுமந்த
அவனது அறிவில்
நிஜமாய்
அன்பு ஜனித்ததா…
எனும் ஒற்றைக் கேள்வியைத்
தூக்கி தலையில் வைத்து
அலைகிறான்..
தான்
முழுதாய் தொலைத்ததை
தேடுகிறான்..
முழுதாய் தேடியதை
தொலைக்கிறான்..
கடைசிவரை…
யாருக்கும் புரியும்
அவன் கவிதை போல
இருக்க விரும்பினான்..
யாருக்கும் புரியாத
அவன் அன்பைப் போல
இறக்க விரும்பினான்

தனித்துவிடப்படுதல்

இப்போதெல்லாம்
என்னுள் வரிசை கட்டி
நிற்கிறது..
நிறைய.. நிறைய
சப்தமும்,சலனமும்…
மௌனமும்.. வார்த்தையும்..

பறந்து போகும் நாட்களில்
மறந்து போன
இறக்கைகளோடு
வாழப் பழகிவிட்டிருந்தேன்..

இரவின் கிளைகளிலிருந்து
உதிரத் தொடங்குகிறது
பகலில் ரசிக்க மறந்த
ஒரு குழந்தையின்
முத்தம்…

பார்வையற்றுப் போன
வெறுமையை குடித்து
தினம்
தாகம் தீர்க்கிறேன்…

வசப்படாத
வானத்தை
குளிருக்கு
போர்த்தியபடி..
கருணையை கடனாக
யாசித்துக்கிடக்கிறேன்..
தந்தும் கடக்கிறேன்…

என்னால்
தொலைக்கப்பட்ட….
நினைவுகள்
நிழலாய்
நீள்கிறது…


கவிதைகள் வாசித்த குரல்:
செ.வினோத் பரமானந்தன்
Listen On Spotify :

About the author

வினோத் பரமானந்தன்

வினோத் பரமானந்தன்

தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த வினோத் பரமானந்தன் 21 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரை இரண்டு கவிதைத்தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கும் இவர் பல கவியரங்கங்கள்மற்றும் பட்டிமன்றங்களில் பங்கேற்றிருக்கிறார். ராணுவம் குறித்தான இவர் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்தி அனுப்பிய குரல் பதிவை பொக்கிஷமென பெருமிதத்தோடு குறிப்பிடும் வினோத் பரமானந்தன் விரைவில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website