01. வீழ் சுவை
கரடாய் கிடந்த உடல்
மாயமாய்
தினவும் வேட்கையும்
விளையும் நிலமானது
இளகியும் திமிறியும்
உருளும் தேகப் பரப்பில்
இரவின் வெளிச்சத்தில் தெரிந்தன வந்து சென்ற
சின்ன சின்ன விலங்குகளின்
காலடிச் சுவடுகள்.
இணை நகர்ந்தபோன
இனியான காயும் நாட்களில்
பால் பேதமற்று
முதிர் தனியர்களுக்கு
உச்சம் ‘சே’ யென சலித்து
கலைந்து வீழ்ந்துக் கிடக்க..
ஒரு பெரு மிருகம்
தேவையாகிறது.
இரையாக..
****
02.
வெளியில் கேட்காத அதட்டும்
மெளன உத்தரவில் மனிதர்களை
வீட்டு கூண்டுகளுக்குள் அடைத்து விட்ட நிம்மதியில் சற்றே அகலமாய்
தன் உடலை கிடத்திக் கிடக்கும்
இந்த இரவு நேர தெருவை பார்க்கையில்
பொறாமையாகதான் இருக்கிறது.
மனசையும் உடம்பையும்
கிடத்திவிட்டு விருப்பபட்ட நேரங்களில் மீட்கும் வித்தை தெரியாத எனக்கு.
****
03.
பட்டென
விழித்துக் கொள்ளும்
நடுநிசியில்
அலையுறும் கரங்களில்
அறுந்து விழுகின்ற
நூலாம்படைகளாக
ஈரக்கனவுகள்.
பிடித்த தேகங்களிலிருந்து
இழை இழையாய்
எடுத்து சேகரித்த நுணுக்க புடைப்புகள் மீது
பின்னிய முயக்கங்கள்
தலைகுப்புற கவிழ…
மொட்டுகளாகவே நின்று விடுகின்றன.
புசிக்காத
இச்சையின் மீதங்கள்.