cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 36 கவிதைகள்

அவள்கள் அற்புதக்காரிகள்


கொம்புகளற்ற
செம்மறி ஆட்டைப்‌ போல
ஆசைகளற்ற அவளைத் தான்
அவர்களுக்கு விருப்பம்

வளர்ந்த பின் சுருளும் சில
செம்மறி ஆட்டின் கொம்புகள் போல
வளர்த்த பின் வளைக்கப்படுகிறது
அவள் ஆசைகள்.!

கருப்பு, பழுப்பு, இன்னட்டு
நிற செம்மறிகளைக் காட்டிலும்
வெள்ளைக் கம்பளி வணிகச் சந்தையில்
விலைபோவதைப் போலத் தானே
திருமணச்‌சந்தையில் அவளும்.!

பழிச்சொல்லுக்குப் பயந்தே
தன் வினை செய்ய பழக்கப்படுத்தபட்ட
அவள்கள் ஒவ்வொருவருக்கும்
இரைச்சலுக்குப் பயந்து எதிர்வினை செய்யும்
செம்மறியின் சாயல்.!

ஒரு செம்மறி ஆடு
கம்பளியைச் சுமப்பதைப் போல
அவள் கனவுகளைச் சுமக்கிறாள்
அதனாலோ என்னவோ
அவள் கனவுகளும் அதன் ரோமத்தைப் போல
தவறாமல் மழிக்கப்படுகிறது

சேகரித்த ரோமங்கள் யாருக்கோ கம்பளியாகி
கதகதப்பைத் தருவது போல்
சிதறடித்த கனவுகள் யாருக்கோ பலனாகிப் போகிறது.!

இப்படித் தன்னை
புல்லினமாக்கி பல் இளித்த
அந்த ஆட்டு மூளைக்காரர்களின்
கச்சிதப் பிடியில் இருந்து தப்பி
இந்த மந்தையில் இருந்து விலகும்
அவள்கள் அற்புதக்காரிகள்.!


கவிதைகள் வாசித்த குரல்:
முத்து மீனாட்சி
Listen On Spotify :

About the author

முத்து மீனாட்சி

முத்து மீனாட்சி

திருப்பூரைச் சார்ந்த  முத்து மீனாட்சி உயிர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, ஒரு தனியார்ப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.  கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் ஆர்வமுடைய  இவரது கவிதைகள்  பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களில்  வெளியாகி இருக்கின்றன.   இதுவரை வெளியிட்டுள்ள  கவிதைத் தொகுப்புகள்,  1. மௌனம் ஒரு மொழியானால்,  2. கவி தேடும் விழிகள்.   இலக்கிய அமைப்புகளில் இணைந்து இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

 தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளர் விருது,  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய இலக்கியப் படைப்பு ஜீவா விருது‌, தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை வழங்கிய கவிச்சிகரம் விருது, .தளிர் இலக்கிய களம் வழங்கிய கவிச்சுடர் விருது, அக்கினிப் பெண்கள் தமிழ்ச் சங்கம் வழங்கிய பாரதிச் சுடர் விருது உள்ளிட்ட  விருதுகளையும் பெற்றிருக்கிறார். அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கம் இந்தியா பிரைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய  ‘200 காப்பிய மாந்தர்கள்’ ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உலக சாதனை நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website