1. இருளைத் தின்னும் மண்டூகம்
இருள் மருதாணியிட்ட அமாவாசையின் கரங்களில்
முழுவதுமாய் சிறைபிடிக்கப்பட்டிருக்கும்
எனது வானத்தில்
பறக்கும் சிறு மின்மினியாய்
அவன் நினைவுகள்..!
பெருவீடாய்
நிழற்குடை விரித்திருந்த மருதமரத்தின் மடியில்
மெல்லச் சாய்ந்துகொண்டு
நீர்மொண்டு இளைப்பாறும்
தாய்மானின் கர்ப்பமென
அவன் எனக்காய் அனுப்பிய
நினைவுப்பரிசில்கள்
விறகு தறிக்கும் கட்டாரியென
கூர் தீட்டிப் பளபளக்கும் அவன் பார்வையில்
நாணல்கள் நாணின
மூங்கில்களும் வெட்கித் தலைகுனிந்தன.
குயில்கள் புதிய கீதம் இசைத்தன
வானம் கண்ணீர் மறந்து சிரித்தது.
நானும் தான் சுடரீ…!
வயற் பெருவெளியெங்கும்
குறுமீன் வேட்டையிடும்
நாரையின் கண்களாய்
தினமும்
நம்மைப்பற்றி வலைவீசுகின்றனவாம்
ஊரவரின் கண்கள்.
நீர்வற்றிய குளத்தின்
நிலவெடிப்புகளின் உள்ளே ஒளிந்துகொள்ளும் வயல் நண்டாய்
அச்சத்தோடுதான் நகர்கின்றன
என் கால்கள்..!
மழை ஓய்ந்த பின்னால்
விதை தேடும் பறவையாய்,
பொருள் தேடித் தொலைகின்றன
அவன் நிமிடங்கள்,
பெருமழையில் உடல் உப்பிச் சிதைந்து போகும்
மாரித்தவளையாய் அழைப்புக்களை
எதிர்பார்த்து ஏமாற்றத்தோடு சிதைந்தழிகிறது
என் மழைக்கால இரவுகள்…
2. வார்ட் நம்பர் பன்னிரண்டு
உயிரைப் பிழியும்
மருந்து வாடையைச்
சகித்துக் கொள்வதாய் எடுத்த உறுதிமொழிகள்
சிதைந்து போன இரவொன்றில்
என் சொற்கள் காலாவதியாகி
குப்பைத்தொட்டிகளில் போடப்பட்டிருந்தன
தேடிப்பார்க்கிறேன்
சுற்றிலும் எங்கும் தனிமை இல்லை
அது எனக்குள் தான் எங்கோ ஒளிந்திருக்கிறது..
ஓயாமல் ஒலி எழுப்பும் கருவியைச் சினந்தபடி நகர்கிறது
பக்கத்துக் கட்டில் பாட்டியின் வாழ்வு..
எலும்பைப் போர்த்தியிருந்த கசங்கிய தோலில்
திணித்திருக்கும் சேலேன் ஊசியை
அடிக்கடி சபிக்கின்றன அவள் கண்கள்..
முக்காடு அணிந்த முஸ்லீம் சகோதரிகளின்
ஓசையற்ற அழுகையைச் சுமக்கும்
மின்விசிறிக் காற்றில்
அக்கணமே மரணமொன்று நிச்சயமாகியிருந்தது
நள்ளிரவில்
சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் தாயோடு
போராடும் பராமரிப்புப் பெண்னொருத்தியின்
அந்நியச் சொற்கள் போர்வையற்ற கடுங்குளிரிலும் நடுங்க மறுத்தன..
இருளைக் கூப்பி பகலுக்காய் பிரார்த்திக்கிறேன்..
கைகளை விரித்து வெளியேறும் வைத்தியர்களை நோக்கி
ஓலமிடும் தாயொருத்தியின் கண்ணீரில்
விடிந்தது காலை..