1.
கேட்டதெல்லாம்
நூற்றாண்டின் கால் பகுதியைத்தான்
பிரியத்தின் வேர்கள்
எப்போதும் ரகசியமானவை
இன்னும் சில முடிச்சுகள்
நெகிழக் காத்திருக்கின்றன
குரலற்றுப்போனவனை
எங்குத் தேடுவேன்
இப்போது
****
2.
கண்காணாத தூரத்திற்குத்
தொலைந்திருக்க
வேண்டியவர்கள் நாம்.
பொருத்தமற்ற நிறங்கள்
நம் இரவுக்கும் பகலுக்கும்.
நாம்
நிழலென்றில்லாத
எரிந்த வனத்தின்
சாம்பல் பூக்கள்.
இருவரையும் தலைகீழாய்த் தொடுத்திருப்பது
இரக்கமற்ற காலம்.
****
3.
நான் பறவை என்பதை
எப்போதும் நீதான் நினைவூட்டிக்கொண்டிருப்பாய்
கத்தரித்த சிறகுகள் வளர்வதற்கு முன்
மீண்டும் அவை நறுக்கப்பட்டு விடும்
தவ்வி தவ்வி நீ இருக்குமிடத்தில்
அமர்ந்துகொள்வேன்
என் முகம் பார்த்தே
எங்காவது தேடி கவிதை எடுத்து வருவாய்
நெல்மணி என
ஆதுரத்தின் மொத்த பொருளும்
கொண்டுவந்து தரும் கவிதையில்
ஒளித்து வைத்திருப்பாய்
என்றாவது கத்தரிக்கப்படும் கருவி
கூர் மழுங்கும்
அதற்குள் வேகமாய் சிறகுகளை
வளர்த்துவிட வேண்டும்
எப்பொழுதும் உள்ளிருக்கும்
காதலை உளறிவிடாதே
உதிர்க்கும் சொற்களில்
பொருளிருந்து பார்த்ததில்லை நான்
அதிகபட்சமாய்
உனக்குத்திருப்பித்தர
வானத்தின் உயரத்தைக் காட்டுகிறேன்
பின்னாளில் ஒருமுறை.
தனித்துவிடப்படுதல்
இப்போதெல்லாம்
என்னுள் வரிசை கட்டி
நிற்கிறது..
நிறைய.. நிறைய
சப்தமும், சலனமும்…
மௌனமும்.. வார்த்தையும்..
பறந்து போகும் நாட்களில்
மறந்து போன
இறக்கைகளோடு
வாழப் பழகிவிட்டிருந்தேன்..
இரவின் கிளைகளிலிருந்து
உதிரத் தொடங்குகிறது
பகலில் ரசிக்க மறந்த
ஒரு குழந்தையின்
முத்தம்…
பார்வையற்றுப் போன
வெறுமையைக் குடித்து
தினம்
தாகம் தீர்க்கிறேன்…
வசப்படாத
வானத்தை
குளிருக்குப்
போர்த்தியபடி..
கருணையைக் கடனாக
யாசித்துக்கிடக்கிறேன்..
தந்தும் கடக்கிறேன்…
என்னால்
தொலைக்கப்பட்ட….
நினைவுகள்
நிழலாய்
நீள்கிறது…
மிக அருமையான வரிகள் தோழர்… வாழ்த்துகள்…
குரல் தந்த மகிழ்வில் – வினோத் பரமானந்தன்