முக்கோணத்திலொருச் சாய் சதுரம்.
முன்பொரு முறை
பார்த்த
பல்லியைப்போல
இருந்தால்
ஊர்ந்து ஊர்ந்து
ஒவ்வொன்றாக
எண்ணலாம்.
நிறத்தின் வாடை
பிடித்து
மேற்கூரையின்
வழுவழுப்பில்
சறுக்கலாம்.
ஒளிரும் வெளிச்சத்தை
உள்ளங்கையில்
மூடலாம்.
இப்படியாகவே
கழியும்
இரவுகளைக் கடந்து
யாவையும்
மறைக்கும்
கீற்றுக்கூரை வேய்ந்த
குடிசையாவது
வேண்டும்.
வீதியிலேயே
வாய்த்த
வாழ்க்கைக்கு
வாழுமொரு
சாய்மானம்.
********
நவில்தலும் தகும்.
அந்தி சாயும்
இவ்வேளையில்
கடந்து போன
பகலில்
இரண்டு முறை
திட்டி இருக்கிறேன்.
இருபத்தி எட்டு முறை
சிரித்து இருக்கிறேன்.
ஐந்து முறை
வருந்தி இருக்கிறேன்.
ஒரு முறை
அவமதிக்கப்பட்டிருக்கிறேன்.
மூன்று முறை
பொய்ச் சொல்லி இருக்கிறேன்.
ஒரு முறை
துரோகமிழைக்கத்
தூண்டப் பட்டிருக்கிறேன்.
நான்கு முறை
மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்.
ஒரு முறை
அழும் தோளிற்காக
ஏங்கி இருக்கிறேன்.
நான்கு முறை இரக்கப்பட்டு
ஈந்திருக்கிறேன்.
மூன்று முறை
உயிர் தப்பி இருக்கிறேன்.
கணங்கள் தோறும்
சொல்லி வந்த
நன்றியைத்தான்
எண்ணிக் கொண்டிருக்கின்றேன்
இப்பொழுதுவரை.
ஏன் ஒரு முறை கூட
எதையுமே
வெறுக்கவே இல்லையென்ற
ஆச்சரியத்தோடு.
*******
தனித்தொதுங்கிய பூத்தல்.
கிளையில்
இருக்கும்
மஞ்சள் பூக்களோடு
காற்றுக்கேற்ப
மனம்
அசைந்தாடியது
தன்நிலை மறந்து.
தனித்திருந்த
அந்த
ஒற்றைப் பூவோடு
சிநேகித்தது
விசேட காரணமில்லை
இம் மையலில்.
யாவும் மறந்து
பூவாகிப்போன போது
விடுபட்ட
காம்பிற்கு
இத்தனை
அவசரம் ஆகாதுதான்.
கோட்டோவியமொன்றை
வரைய முயன்ற
காற்றோடு
தரை தொட்டபொழுது
விலகிய சருகுகளுக்கு
எத்தனைப் பாந்தம்.
பார்த்து நடந்திருக்கலாம்
படு பாவி
காவந்து ராணுவமாக
காலனியில்
நசுக்கி விட்டான்
மனதை.
பூத்திருக்கும்
இந்தப்
பூவை
சாளரம் தாண்டி
பறிக்கப்போவதுதான்
எவரோ…
இல்லை
இது
உதிரப்போவதுதான்
எக்கணமோ.
****
வியக்க வைக்கும் வினையூக்கிகள்.
திரும்பிப் பார்த்ததன் காரணமெதுவுமில்லை
என்னிடம்
முறைத்தப் பெண்
அறக் கூத்தொன்றை
கிளம்பினால்
சொல்லித்
தப்பிப்பதற்கு.
நண்பருடன்
சிரித்துப்
பேசிச் சென்றபொழுது
வெளிநாட்டு வெள்ளையர்
வெகுண்டெழுந்து
துரத்தியதன்
காரணம்
புரியவே இல்லை
இப்பொழுது வரை
எனக்கு.
ஒலி எழுப்பி
வண்டியில்
சென்றபொழுது
முந்தி வந்து
முறைத்த கணவனிடம்
சொல்வதற்கு
என்னிடம்
ஒன்றுமில்லை
இயலாமையின்
பதபதப்பைத் தவிர.
தெரியாமல்
தொட்டதன்
கைபேசி அழைப்பிற்கு
என்ன சொல்வது
விழித்தவர்
அழைத்துக்கேட்டால்
மன்றாடும்
பொய்க் காரணத்தைத் தவிர.
அனிச்சை செயல்கள்
அன்றாடம்
அதன் போக்கில்
நிகழ்ந்துகொண்டேதான்
இருக்கிறது.
சாளர மறைப்புத் துணியின்
அசைவாக
எப்பொழுதும்.
யாவிற்குமிடையில்
வந்து போகிறவர்கள் தான்
தீர்மானிக்கிறார்கள்
அற்றையப்பொழுகளின்
அறியாத
அடுத்தக் கணத்தின்
நிகழ்வை
எதுவாகவும்.