(1) கோட்டில் ஒரு புள்ளியாய் …
ஈசல்களினதும் தும்பிகளினதும் பறத்தல்
மழைக்கான அறிகுறியைத் தவிர
புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறது
திறந்தேயிருக்கும் காட்டிற்கு
பதட்டமாக இருப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது
ஒன்றையொன்று பிடித்துத்தின்னும்
உயிரினங்களுக்கு மனித முகங்கள்
ஈர இலைகளின் சறுக்கல்களில்
அவசர உலகின் பரபரப்பு
பேரலை அள்ளிச்சென்ற ஹார்மோனியம்
டொல்ஃபினின் தொடுகையினால் அதிர்கிறது
ஒழுங்கற்ற புள்ளிகளை இணைப்பதிலேயே
ஆர்வம் காட்டும் கோட்டிற்கு தத்துவத்தை
யார்தான் சொல்லிக்கொடுப்பார்கள்
நேற்று என்னைக் கடந்தவர்கள்
இன்று வேறுமாதிரித் தோற்றமளிப்பது போல
நானும் அவர்களுக்குத் தெரியலாம்
வன்மங்களுக்கு மலைப்பாம்பின் சாயல்
பாழ் கிணற்றுக்குள்
எத்தனை காலம்தான் உயிர்வாழும்
அன்றில்..
(2) கரை இல்லாத கடல்
கவிதை சமைக்கத் தோன்றும் போதெல்லாம்
ஈர விறகுடன் வருகிறாய்
முன் கிடைத்த வரங்கள் எல்லாம்
பயனற்றுப் போயின
வேகாத வார்த்தைகளோடு
மற்றொரு பரிமாணத்திற்குள்
எப்படி நுழைவது
குரல்கள் கேட்காத உலகம் உறங்கியே இருக்கும்
எழுத்துகள் தொலைந்து போகும்
பேச்சுகள் அநாதையாகும்
கவிதைகள் இறந்து போகும்
அப்போது
கடல் ஆர்ப்பரிக்கும்
இலக்கியம் சுருண்டு மூழ்கும்
கரை கரைந்து போகும்..
(3) தாழிடப்படாத கதவு
திறந்தே இருக்கும் இரவில்
செதுக்கப்பட்ட துரோகங்கள்
பெருவனத்தை ஊடறுக்கும் காட்டாற்றில்
குறுக்கும் நெடுக்குமாக நீந்துகின்ற குமுறல்கள்
மழைக் குருவிகளின் எச்சங்களில்
வரலாற்றைப் புதுப்பிக்கும் விதைகள்
திராட்சைக்கு ஒப்பான சிவப்பு வைனில்
நிறம் மாறிப்போயிருக்கும்
ஏமாற்றங்கள்
கிளியின் சீட்டில் மைக்கல் ஆஞ்சலோவின் ஓவியம்
தேய்ந்து போன ரேகைகளில் இழந்து போன தேசம்
இருள், துரோகம், குமுறல்,
ஏமாற்றம் பற்றி எதுவும் தெரியாமல்
வலை பின்னிக்கொண்டிருக்கும்
சிலந்தியை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது..