cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 36 கவிதைகள்

ராணி கணேஷ் கவிதைகள்


பிரியத்தின் கேள்விகள்

‘ஏன் பேசவில்லை’ என்ற மறுகலில்
எல்லாமே கொட்டிவிட்டேன் உன்னிடம்.
கவலைகளை கடந்து மகிழ்ச்சியாய் வாழ
எல்லோரும் அறிவுரை கூறுகிறார்கள்.
நீயும் அதையே தான் சொல்ல ஆரம்பித்தாய்.
எல்லோரைப் போலவும் நீ உபதேசிப்பதில்
எனக்கு எந்த உபத்திரவமும் இல்லை, துளி பிரியமும் இல்லை
அறிந்த விடயங்களை மீண்டும் செவிமடுக்கிறேன்
மீட்சியின் வடிகாலாகக்கூடும் என்ற மீச்சிறு நம்பிக்கையில்
‘சொல்வது எளிது… மன்னித்துக்கொள்
நான் வேறு என்ன செய்வேன்’ என்கிறாய்.

கோபத்தில் உமிழ்ந்த சொற்களை தூசு தட்டுகிறாய்
‘இதனால் தான் கோபப்பட்டாயா?
இதனால் தான் அமைதியானாயா?
நிறைய அழுதாயோ?
அப்போதே சொல்வதற்கென்ன?’
கேள்விகளால் உள்ளத்தில் நுழைந்து, கண்களை நிறைக்கிறாய்…
எல்லோரைப் போலவும் அறிவுரை சொல்வாய்தான்
அதெனக்கு தெரிந்தே தான் இருந்தது, இருப்பினும்
பிரியங்கள் நிறைந்த கேள்விகளின் வழியே
வழிந்திடும் இந்த ப்ரத்யோக அன்பிற்காக மட்டும்தான்
அத்தனையும் பகிர்ந்தேன் இன்று!

***

பதிலில்லா வார்த்தை

‘பைத்தியமே தான் உனக்கு’ என்று பழிக்கிறாய்..
ஒன்றுமே பேசாமல் உள்ளுக்குள் உடைகிறேன்.
பின்னொரு மழை நாளில் திடீரென அழைத்து
‘மன்னித்துக்கொள் என்மீது தான் பிழை’ என்கிறாய்..
‘இன்னும் கோபமாக இருக்கிறாயா?’ என்ற வினாவிற்கான
விடை கிடைக்கும் முன்னரே மற்றொரு மன்னிப்பைச் சேர்க்கிறாய்..
‘மன்னித்துவிட்டாயா’ என மறுபரிசீலனையும் செய்கிறாய்.
‘கிறுக்கா உனக்கு’ என்ற என் விசனத்திற்கு
என்ன பதிலிறுப்பாய் என்று அறிந்தே
முற்றுப்புள்ளி வைக்கிறேன் ‘சரி விடு’ என்று…
நீ சொல்லவும் வேண்டாம்…
நான் கேட்கவும் வேண்டாம்…
பதிலிறுக்க முடியா ஒற்றை வார்த்தையை.

***

தொலைவோம் வா.

இருள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதையில்
கண்காணாமல் தொலைந்து போன
உன்னைக் கோபித்த காரணத்தைத் தேடியலைகிறேன்.
பாதையின் முடிவில் குளிருக்கு இதமாய்
ஒரு கோப்பை தேநீரோடு
எனக்காய் காத்திருக்கிறாய் நீ!
நானும் நீயுமான அந்த பொழுதில்
வேறெதுவுமே தேவையாயிருக்கவில்லை.
நாம் இப்படியே இங்கேயே தொலைந்து போவோம் வா!

***

மன்னிப்பு

எந்த விளக்கங்களும் தேவையாயில்லை
தவறுகளை நியாயப்படுத்த…
‘மன்னித்துக்கொள்’ என்றிட அவகாசம் தந்ததாயில்லை…
ஒற்றை நொடி போதுமாயிருந்தது
ஒருதுளி நீர் என் விழி நிறைக்கவும்,
ஒன்றுமே பேசாமல் நீ என்னை அணைத்துக்கொள்ளவும்…
இப்படித்தான்…
நமக்குள் அடிப்படையான சில வார்த்தைகள் அழிந்தேபோயிற்று!

***

கடந்தகால தேவதை

நீ என் கடந்த காலத்தில் மட்டும் இருந்திருக்கலாம்.
கனவுகளில் இன்னமும் வளைய வரும் தேவதைக்கும்
நிஜத்தில் நின்றுகொண்டிருக்கும் உனக்குமான
இருபது வருட வேறுபாடுகளை
ஏற்க மறுக்கும் ஏக்கம் மிகுந்த மனதிற்கு
நீதான் அவள் என்று விளக்கிச் சொல்ல விருப்பமில்லை.
நீ என் கடந்த காலத்தில் மட்டும் இருந்திருக்கலாம்…


கவிதைகள் வாசித்த குரல்:
ராணி கணேஷ்
Listen On Spotify :

About the author

ராணி கணேஷ்

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ராணி கணேஷ், கணிப்பொறி அறிவியல் படித்து தற்சமயம் பப்புவா நியு கினியா தேசத்தில் சொந்த தொழிலை நிர்வகித்து அங்கேயே வசிக்கிறார்.பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். பள்ளிக்காலம் தொட்டே கவிதைகள், கட்டுரைகள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். இணையத்தில் கவிதை, திரைவிமர்சனம் என எழுதி வருபவர். சமூக சேவையில் விருப்பம் உடையவர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website