நேற்று இந்நேரம்
உன் மடித்தரையில் படுத்து
இரு மீச்சிறு வானத்தில்
அங்குமிங்கும் அலையும்
இரு கருவிழிகளைப் பார்தேன்.
இப்போதோ கட்டாந்தரையினில் படுத்தபடி
ஆகாயத்தில் பூத்துக்கிடக்கும்
ஆயிரமாயிரம் உடுக்கண்களை எண்ணுகிறேன்.
மடித்தரைக்கும் கட்டாந்தரைக்குமிடையே
இருபத்துநான்கு மணி நேரம்
நசுங்கிக் கிடக்கின்றது.
****
இரு கைகளை விரித்து
நெஞ்சோடு அணைத்துக்கொள்ள விளிக்கும்
உன் உருவத்தை
யார் தீட்டினார்களென்று தெரியவில்லை
என் பாதப்பூக்கள் உதிரும்
இப்பிரபஞ்சமெங்கும் அவ்வுருவம்
அனிச்சையாய் விரிகிறது.
நினைவுத் தூரிகைதான் தீட்டியதெனில்
கறுப்பு வெள்ளையை விடுத்து
பஞ்சவர்ணத்தில் தீட்ட
நிஜத்தூரிகையை நாடுகிறது
வண்ணமிழந்த என் மனம்!
என் வானில்
பூத்துக் கிடக்கும் நட்சத்திரங்களுக்கு
‘மிஸ் யூ’ எனப் பெயர் சூட்டி
ஆட்காட்டி விரலால்
ஒன்று, இரண்டு, மூன்றுயென
எண்ணத் தொடங்குகிறேன்.
இடையிடையே நாக்குப் பிறழ
மீண்டும் முதலிலிருந்து எண்ணும்போது
அதுவும் மீண்டும் மீண்டும்
பூத்துக் குலுங்கும்.
என்ன விந்தையெனில்
என் வானில் பூக்கும் நட்சத்திரங்களுக்கு
இரவு பகல் கிடையாது
பகலில் விடுப்பு எடுப்பேனென
அடம் பிடிக்கவே பிடிக்காது
கால வரையறையின்றி
பூப்பதையே வேலையாய் வைத்திருக்கும்.