பெருநகர் கூனி
லட்சுமியக்கா நிறைய பொய் பேசுகிறாள் என்பதே
எப்போதும் சுந்தரம் மாமாவின் புகார்
பிள்ளையார் கோவில் தெரு சரளாவுக்கு புருஷன் கிடையாது
தீபாவளிக்கு மாம்பழக் கலர் பாசிப்பச்சை ரெண்டு புடவை எடுத்திருக்கா
மகளிர் சங்கத்து தேர்தல்
என்னைத்தான் இப்பவும் தலைவியா தேர்ந்தெடுத்து இருக்காங்க..
ஒரே வாழ்த்து போங்க
பக்கத்துவீட்டுக்கு புதுசா வந்திருக்காங்கல்ல சுமதியம்மா..
நம்ம லதாவுக்கு நான் அக்கானு நினச்சுட்டேன்னு சொல்லிச் சிரிக்கிறாங்க
நேத்து ஹவுஸ் ஓனர் வந்திருந்தாரு
மதிய நேரமாச்சே சாப்பிட்டு போங்கய்யானு சும்மா சொன்னேன்
வத்தக்குழம்பு ரெண்டுவாட்டி வாங்கிச் சாப்பிட்டு
தயிருக்கும் ஊத்தி
தங்க வளையல்தான் போடணும்
உன் கைக்குனு சொல்லிட்டுப் போறாரு
பாதி உண்மையும் கலந்திருக்கும்
அக்காவின் அரைப் பொய்களெல்லாம்
அறிவாளி மாமாவுக்கு மகா எரிச்சல்
பட்டிக்காட்டில் மகாராணி
நகரத்தில் கூனிக்குறுகி சரியும் போதெல்லாம்
பிள்ளைகளுக்காகவே எழ முயன்றாள்
கூடவே இருக்கும் கைகளெல்லாம் தூக்கிவிட முன்வராதபோது
பிடித்துக்கொண்டு கால்களூன்றித் தரையில் நிற்க
மாமாவுக்குக் கடவுளைப்போல் அவளுக்குப் பொய்கள்
அவற்றை அவளால் கைவிடவே முடியாதென்றும்
அந்தப் பொய்க்கடவுள்கள்
பெரும்பாலும் அவளைக் கைவிட்டுவிடுவதும்
யாரறிந்து யாருக்குச் சொல்வது
இயக்கியோன்
இவளை முத்தமிடுகையில்
அவளின் சுடுசொற்களை ஆற வைக்கிறான்
இவளை ஆரத்தழுவுகையில்
அவளைப் பழி வாங்கிக் கொள்கிறான்
நெடுகப் புணர்கையிலோ
முற்றிலும் துயரைத்தான் களைந்து
வலி உமிழ்கிறான்
சிலநேரம் துரோகமெனப்படுவது யாதெனில்
யாதொன்றும் பெறாவிடத்துப்
பிழைத்திருத்தலின் உயிரனிச்சையாம்