cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 37 கவிதைகள்

செளம்யா கவிதைகள்


(1)
திறந்த தாழின் சப்தத்தில்
இமைபிரிந்து
இணைவிலகி
அவசர அவசரமாக
தனக்குத்தானே
உடுத்திக்கொள்கிறார் உடையவர்.
முக்கண்ணன் மேனி படர்ந்த தைலவாசத்தோடு
அரவத்தின் சலசலப்பும் கூட
சிவந்த நயனமும்
அவிழ்ந்த சிகையுமாய்
எழுந்து நிற்கிறாள் தேவி.
இடம் அளித்த பதியோ
பிரகாரத்துத் தூணின் பின்
ஒளிந்து நெளிகிறார்.
உமையவளின் உக்கிரத்திற்கு
எதிர் நின்ற பக்தன்
செய்வதறியாது
பதறி, அலறி
நடுங்கிய விரல்களால்
திசையுணர்த்தி விடுகிறான்.
தண்டை அதிர நடந்த
யாமளை
திகம்பரனின் காது திருகி
தர தரவென
கருவறைக்கு இழுத்துச் செல்கிறாள்.
நானோ
கண்டும் காணாது
கேட்டும் கேளாது
மெதுவாக
அகல் திரித்து
சுடரேற்றி
கற்பூரம் குழைத்து
மறை சொல்லிய வண்ணம்
கரங்குவித்துத் தொழுகிறேன்
திரிபுரசுந்தரியை.
ஞானாட்சரியே
சாந்தி… சாந்தி.

*****

(2)
உயிரத்து எழும்
நாளுக்கு முன்னதாக
கனவிலாழ்கிறார் கடவுள்.
வரப்போகும் தேவமைந்தனை
முன்னறிவிக்கும் விதமாக
பொழிந்துக் கொண்டிருக்கும் பனி
நடுவே பிரகாசிக்கிறது
மூன்று விண்மீன்கள்.
நட்சத்திரத்திற்கு
ஒரு எழுத்தென
அதற்கு
ஜீ ச ஸ் என்று பெயரிடுகிறார்.
அதன் பொருட்டே
ஓளி அடர்ந்து குவிந்தது.
அந்தப் பேரொளியை
ஏந்திக்கொண்டு உயிர்த்த
சிசுவின் பாதங்கள்
பூமியை தொடும் போதே ,
தன் சின்னஞ்சிறிய
கரங்களால்
நடுங்கும் உடலுடைய
இந்த உலகிற்கு
கதகதப்பூட்டுகிறான்.
துயரார்ந்த விழிகளை
துடைத்து சாந்தப்படுத்துகிறான்.
திசைகளை செழிப்பாக்குகிறான்.
மனிதரில் புனிதரென
மதிக்கப்படுகிறான்.
அழிவில் இருந்து
ரட்சிக்கவந்தவரென
அறியப்படுகிறான்.
அன்பின் மகத்துவரென போதிக்கப்படுகிறான்.
அதீதமான
அந் நம்பிக்கைகள்
அனைத்தும்
ஒரு மாயத் தருணத்தில்
தடம் புரண்டு
அவநம்பிக்கையாகி
விடுகிறது!
மேய்ப்பர்,
ஏய்ப்பவராக தூற்றப்படுகிறார்.
அப்பம் கொடுத்தவர்,
அற்பரென அல்லல்படுகிறார்.
இளைப்பாற்றிய மரத்தில்
கற்கள் வீசப்படுகிறது.
பூமியின் அடியாழத்தில்
ஊன்றிய வேரில்
கிளைத்துச் செழித்த
விருட்சத்தில்
பிதா சுதன்
பரிசுத்த ஆவியின்
பெயரால்
அவரை
சிலுவையில் ஏற்றுகிறார்கள்.

About the author

செளம்யா .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website