உயரக் கோபுரத்து
உச்சிச்சிலுவையின்
நிழல் வீழுகின்ற மணற்பரப்பை
மிதிக்காமல் கடக்கிற
அவளது கால்களின் நாசூக்கினை
தற்செயலென்றே
கருதிக் கொள்!
ஆம்!
தற்செயலென்றே
கருதிக் கொள்
நாத்திகவாதியே!
தாய்வழிச் சமூகத்தைப்பற்றி
வாய்வலிக்கப் பேசிவிட்டு
உணவருந்த வருகிற
உன் மேசை மீது
வாஸ்து மூங்கிலை
வளர்க்கிறவளின் கைகளிலும்,
அடர்வனத்து வேட்டையில்
அம்பெடுத்துப் பூட்டுகிற
ஆதித்தாய் கரங்களுக்குரிய
நரம்புப்பின்னலின் பிரதியைக்
கண்டறியும் நாளில்
நிமிர்ந்து அவளது
விழிகளின் கூர்மையை
நோக்காதிருப்பதே
நலம் உனக்கு
நாத்திகவாதியே!
உன்னிடம் பக்தியைத்
திணிக்காத அவளிடம்
நாத்திகத்தைத் திணிக்காது
இருந்திருக்கலாம் நீயும்…!
ஏனெனில் இப்போது,
அறையின் கதவுகளைத்
தாழிட்ட சுதந்திரத்தில்
தும்மலின்பின் சத்தமாய்
பெயர் உச்சரிக்கப்படுகிற
அதே இஷ்ட தெய்வத்திடம்தான்,
அமரத்தி ஆனபிறகு
தன் அஸ்தி போய்
புண்ணிய நதியில் சேர
உனக்குப்பின்னால்
தான் இறக்கிற வரத்தைக்
கேட்டுக் கொண்டிருக்கிறாள் அவள்
நாத்திகவாதியே!