cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 37 கவிதைகள்

இரண்டு கவிதைகள் : ‘ரவி அல்லது’


புலம் பெயர்ந்த பொறுமை.

எம் பறவைகள்
சிதறியோடியது.

எம் விலங்குகள்
விக்கித்து பார்த்தது.

குருதி குடித்த
நிலம்
செய்வதறியாது
தவித்தது.

இத்தனை
வலி
இத்தனை
இழப்பு.
இத்தனை
ஏக்கம்
யாவுமொரு
கனவான
இவ் வெறுமை.

கொதித்தடங்குகிறது
ஒவ்வொரு
குருதியின் கொதிப்பில்
விழும் வியர்வைகள்.
விதையாக .
துளிர்விடலாம்
மொண்டு குடிக்கும்
தாகத்தணிதலின்
சுதந்திரமாக.
எப்பொழுதாவது.


நித்தியப் பெருக்கின் வாஞ்சையிலொரு சுந்தரக்கூடல்.

கால்களில்
வருடும்
செருப்புகள்
அதே குணமுடையதாக
இருக்கிறது
அரிதென
கழட்டும் தருணத்தில்.

வசீகரிக்கும்
ஆடைகள்
வண்ணத்தில்
அதே போலவே உள்ளது
தரிப்பவன் பெருமைகளற்று.

பயணிக்கும் வண்டியின்
பகட்டும்
பார்த்ததைப் போலவே இருக்கிறது
செலுத்துகிறவரின் அக்கரைகளற்று.

உச்சத்திலும்
உயரத்திலும்
கலத்தல்
வாழ்க்கை
சாத்தியப்பட்டிருக்கிறது
இடை நிலையையும்
அசைய வைத்து.

கையெழுத்துக்கு காத்திருக்கும்
கூட்டம்.
கௌரவத்தை மறைத்து
வாலாட்டுகிறது.
ஒதுக்கீடுகளின்
ஒத்தாசையில்.

அமர முடியாத இடத்திலெல்லாம்
அமர்ந்தாகிவிட்டது
அதிகாரம் கைவரப்பெற்று
வலிகளுக்கு
ஒத்தடமிடலாக.

ஒலிக்க முடியாத இடத்திலெல்லாம்
கம்பீரமாக குரல்
கர்ஜிக்கிறது
நிற பேதமற்று.

துளி நீராக
துய்த்த
அதிகாரம்
கடந்து.
பயனாளர்கள்
நாடெங்கும்
மிகுந்து தான்
காத்திருக்கிறார்கள்
பயமற்று
நாளை சாத்தியப்படும்
நேற்றைவிட
வீரியம் கொண்டென.

யாவற்றிற்குமிடையில்
ஒன்றென கூடிய
பாங்கில்
விலகலும்
இருக்கிறது
ஒன்றாத கேடில்
மறுக்கவியலாத
துயராக.

கணங்கள்
யாவும்
காத்திருக்கிறது
அறிந்ததனைக் கலையும்
தருணத்தை.
சமூக பிரஞையென
சாத்தியமாக்கும்
நாளுக்காக.
அல்லது
நபருக்காக.


கவிதைகள் வாசித்த குரல்:
  கபிலன்
Listen On Spotify :

About the author

ரவி அல்லது

பட்டுக்கோட்டையைச் சார்ந்த ரவிச்சந்திரன் பி.இ., எம்.பி.ஏ ஆகிய கல்வி பட்டங்கள் பெற்றவர். கம்ப்யூட்டர், கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருபவர். ரவி அல்லது எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website