நேற்று போல் இன்று இல்லை
என நம்பும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
இன்று போல் நாளை இருக்காது
என விரும்பும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
நாளை மற்றுமொரு நாளே
என எண்ணும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
ஏதேதோ நடக்கும் போது
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
எதுவுமே நடக்காத போது
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
என்ன நடக்கிறதென்று புரியாத
போதும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
மாற்றம் ஒன்றே மாறாதது
என மறுகும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
அவனே வழியும் சத்தியமும் ஜீவனமுமாக இருக்கிறான்
என மண்டியிடும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
எல்லாப் புகழும் இறைவனுக்கே
எனத் தொழும் மந்தைகள்
அமைதியாக இருக்கின்றன
இன்றைய துன்பங்கள் முற்பிறப்பின் ஊழ்
என உறைந்த
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
காலங்கள் மாறும் என
ஒற்றைக்
கால்கடுக்கக் காத்திருக்கும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
எல்லாம் மாயை இதிலென்ன சாயை
எனப் பெருமயக்கம் கொண்ட
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
பெருந்துயர் வரும்போது
பல்லுருக்கொண்டு எவனாவது அவதரிப்பான்
காப்பான் என்று
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
பொல்லாப் பொட்டலில் குடல்கரைக்கும் பட்டினியில்
தள்ளாடி நடக்கும்போது
வெள்ளையாய் உணவு மழைபொழியும்
கனாக்காணும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
பல்லாயிரம் குண்டுகள் சல்லிசல்லியாகத் துளைக்கும்போதும்
மேற்கை நோக்கித் தொழுதேங்கும்
மந்தைகள் அமைதியாக இருக்கின்றன
கொள்ளைநோய் கோடி கோடியாகக் கொல்லும்போதும்
வெள்ளத்தில் வீடு வாசலோடு தம்மையும் அடித்துச் செல்லும்போதும்
பெருந்தீயில் புல் பூண்டு மான் மயில்களோடு
தானும் எரியும்போதும்
காளான்குடையின் கொடுந்தீ
தோலைக் கருக்கி தசையைச் சிதைத்துச்சுட்டு
கூட்டை எரித்துருக்கி
அயனியாக்கும்போதும்
இல்லங்களின் மேல்
பொல்லாத நாசநாட்டுப்படை
மலந்தூவி வாழ்த்தும்போதும்
பிள்ளை பெண்டுகளை உடையுமின்றி உணவுமின்றி
முள்வேளிக்குள் அடைக்கும்போதும்
கொத்துக்குண்டுகள் கொத்தி
ரத்தமும் சதையும் தெறிக்கும்
போதும்
அப்போதும்
இப்போதும்
எப்போதும்
அதற்கும்
இதற்கும்
எதற்கும்
மந்தைகள்
அமைதியாக இருக்கின்றன
மந்தைகள்
அமைதியாகத்தான் இருக்கின்றன
மந்தைகள்
அமைதியாகவே இருக்கின்றன