மிஞ்சும் நீளம்
சேமித்து அடுக்கிய உயரம்
ஆட்டம் காண்கிறது
தகரப்போகும் உயரம்
யாருக்கானது
என்கிற கேள்வி அர்த்தமற்றது
இடிபாடுகளுக்கிடையே
சிக்கியிருக்கும் உடலை
கையொன்றும் காலொன்றுமாய் பிய்த்து
மீட்க மனமில்லை
இன்னும் பாந்தமாய் பதுங்கிக் கொள்கிறேன்
மீட்பின் விதியை அதன்போக்கில்
அலைய விட்டு
மிச்சமாவது
மீதி தூரத்தின் கணக்கில் சேரட்டும்
முகமூடிகள்
கழற்றி எறியப்பட்டிருக்கும்
முந்தையவை
இறைந்துக் கிடக்கின்றன
இன்றைக்கானது
இன்னும் இன்னுமென
இறுக்கமடைகிறது
நாளைக்கானவற்றின்
அச்சு வார்ப்போடு
போட்டியிட்டு கொண்டிருக்கிறது
இன்றைய நாளை
முடித்து வைக்கப் போகும்
டிக்டிக்
மேலும் அடுக்கி
உயரம் கூட்டிக் கொண்டிருக்கும்
‘ள்’ களும் ‘ன்’ களும்
நகைக்கிறார்கள்
கைவிடப்பட்ட நிஜத்தினை தூண்டி