என்னவெல்லாம்
செய்திருக்கிறேன்
இந்த மனதை!
ஆலய முன்றிலில்
கிடத்திச்சென்றிருக்கிறேன்
ஒருமுறை…
வழிச்செலவு தந்து
பெயர் பதிந்து
விடுதியில் விட்டேன்
ஒருமுறை….
முகம் காணவும் பிடிக்காமல்
குப்பைத் தொட்டியில்
வீசி எறிந்தேன்
ஒருமுறை…
கோடி முறை
தண்டவாளத்தின் நடுவில்
கிடத்தியிருக்கிறேன்…
சீசாவில் அடைத்து கட்டி
கடலில் எறிந்திருக்கிறேன்…
பிடிசாம்பலென்றாக்கி
ஆற்றில் கரைத்து
அழுது புலம்பி
வீடு திரும்பியிருக்கிறேன்…
என்னவெல்லாம்
செய்திருக்கிறேன்
இந்த மனதை!
என்னை நானே
கைநெகிழ்வதும்,
என்னை நானே
மீட்டுக் கொள்வதுமான
அலகிலா விளையாட்டா
இவ்வாழ்வு?
தொலைத்து தேடியும் தேடித் தொலைத்தும் மானங்கெட்ட மனது மண்ணுக்குள் போன பின்னும் மரணிக்காது. இது மட்டுமே எனக்கானது.. அழகு