அதுவன்றி..
பிறகு நாம் சந்தித்துக் கொள்வதைப் பற்றி
பேச மறுத்துவிட்டோம்
உனது பாதையின் இறுதி விளம்பு
என் பார்வையிலிருந்து மறையும் வரையில்
அங்கேயே நின்றிருந்தேன்
இப்போதும்
கனவுகளை தூர் வாரும் மௌனத்தின் அடியாழத்தில்
நின்றுகொண்டே இருக்கிறேன்
ஒரு சிறு முணுமுணுப்பை கூட எதிரொலித்திடாத
இரவுச் சுவர்கள் திறக்கப்படாத வார்த்தைகளால் தடித்திருக்கின்றன
காலத்தில் பின்தங்கிவிட்ட எண்களை
பிளந்து பார்க்கிறேன்
ஒவ்வொரு முகமாக அதிலிருந்து உரிந்து தொங்குகிறது
இம்மனம்
பசியுள்ள வன மிருகத்தின் உறுமலை
முதன்முதலாக பதிவு செய்து
ஒலிபரப்பியது
ஒரு விருந்தோம்பலின் மேஜையில் என்று நினைக்கிறேன்
இதன் பிறகும்
வாசலைத் திறந்து வைப்பதில் உவப்பேதுமில்லை
பைத்தியக்காரனின் பாதைகள்
வேறெங்கும் தொலைந்து போவதில்லை
அவன் அதிகம் நம்புவது
தன் பாதங்களை மட்டுமே
◊◊◊◊◊◊◊◊◊
உள்ளிருந்து வெளியேறாமல்..
கொஞ்சம் கூட கருணையே வேண்டாம் என்பதாக
முடிவெடுத்த ஓர் இராப் பொழுதில்
பால்கனி கைப்பிடி கம்பி மீது வந்திறங்கியது ஓர் ஆந்தை
என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டே
கூ.. கூ.. வென்றது சற்றை நேரம்
சிறகுகளை அகல விரித்து படபடத்தது
அதன் வட்ட கண்களின் ஆழத்தில்
நான் தொலைந்து கொண்டிருந்தேன்
மெல்ல மெல்ல
எவர் பொருட்டும் ஒத்துக்கொள்ள முடியாமல் போகிற
தருணத்தை
பிரபஞ்ச இருள் கவ்வியிழுக்கிறது
தலைக்குள்ளிருந்து
அனைத்திலிருந்தும் விடுபட்டு பறந்து போய்விடவே
எப்போதும் விரும்புகிறேன்
என்னைத் தூக்கிப் போக வந்த ஆந்தையின் கூர் நகங்களை
பரிவோடு தொடுகிறேன்
இப்போது என் காலடியில்
சாம்பல் வண்ணத்தில்
நாலைந்து இறகு கிடக்கிறது
என்னையே பார்த்தபடி
◊◊◊◊◊◊◊◊◊
யின்-யாங்
சுவர் கடிகாரத்தின் நொடி முள் நகர்கின்ற ஓசை
மலைகளுக்கு அப்பால் கேட்பதாக
வந்து சேர்ந்த தகவலில்
குறிப்புகள் இல்லை
அடையாளம் இல்லை
அன்றாடத்தின் இழுவரையை திறந்து பார்க்கிறேன்
பழைய சம்பவங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
டைரியிலிருந்து வெளியே வருகிற
என்னை
அழைத்துப் போய் மாடியில் நிற்கிறேன்
இருவருமே
அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறோம்
மழை மேகங்கள் ஒன்று திரண்டு மோதும்போது
வந்து போகிற எண்ணற்ற அந்தி முகங்களாய் துடிக்கின்றன
நொடி முள் தொட்டு விலகி தொட்டு விலகுகிற
நாட்களும் மாதங்களும் வருடங்களும்
இருபத்திநாலு மணி நேரங்களும்
சட்டென திறந்திடும் வெற்றிடத்தில்
புலர்கிற மௌனத்தை
தீண்டுகிறது அடிவாரத்தில் பாயும்
மின்னலின் ஈரம்
◊◊◊◊◊◊◊◊◊
யாரோவால்..
நிகழ் பொழுதின் அபத்தத்தை சிதைத்திடாமல்
மண்டைக்குள் நுழைகிற திமிரைத்
தூண்டுகிற
அர்த்தக் கேவல்
என் மேஜையின் மீது
வைத்துவிட்டுப் போகிறது
ஒரு
பழைய அவமானத்தை