கல்வீடாகி கொடியேற வழிஇல்லாவிடினும்
தினம் ஒரு ரூபாயென்று
ஏழு மணிக்காவது பறங்கிப்பூ வந்துவிடுகிறது
சாணிப்பிள்ளையாருக்கு
பனிக்குப்பயந்து இரவே போட்டுவைத்த ரங்கோலி
மொபைல் குழுக்களுள் வரலாறாகிறது
ஒன்றிரண்டு நிறங்களில்கொம்புகள் மிளிர்ந்ந காலம் போய்
கட்சி கட்டும் நிறமாலைகளில்
மாடுகளுக்குக் குழப்பம்தான் தான் எந்தக்கட்சியென்று
நெட்டி மாலையா, பிளாஸ்டிக் மாலையா என்று சற்றே குழம்புகிறார்கள்
சூழல் கதை கேட்ட முதலாளிமார்கள்
செவ்வந்திகளில் திருப்தியுறாமல்
மல்லிகை ‘ மாதிரி’ மினுக்கும் காக்கரட்டான்களுக்கு வாழ்வு
வாசமிலா மலரிது வசந்தத்தைத் தேடுது
யார் திங்கிறா வசனத்தோடு
கட்டுக்கரும்புகளைக் கைவிட்டு
நாமிருவர் நமக்கிருவர் என்கிறார்கள்
பொங்கலோ பொங்கல் கூவுவதையும்
பால் பொங்குவதையும்
வீடியோ எடுத்து விட்டுப்போனவர்களுக்கு
பொங்கல் வாசம் காட்டிவிடுகிறார்கள்
பள்ளயப் பொங்கலில் மிதக்கும்
நெய்யையும் தயிரையும்
சூரியனுக்கு முன்பாகவே சுவைத்துக்கொள்கின்றன
அவன் தேர்க்குதிரைகள்
மற்ற நாளில் கிடைக்காத ருசியில்
அதிரசம் கொழுக்கட்டைகளும்
கருவாட்டுக்குழம்பும் இருப்பதற்கு
வீட்டுதெய்வங்கள் இறங்கி வந்ததுதான்
காரணமென்று அடித்துக்கூறுவாள் ஆத்தா
ஆம்னி பஸ்காரனை வாழவைத்து
வாசனைகளை மனதிலேற்றியபடித் திரும்பும் நகரக்கூட்டம்
மிச்சம் மீதி பலகாரமும் குழம்பும் கரும்புத்துண்டுகளுமாகக்
கரையேறுகின்றன
வேட்டி முண்டாசோடும்
தாவணி பூ வளையல்களோடும்
பாரவண்டியில் நின்றாடும் படங்கள் எக்கச்சக்கமாய்
இன்ஸ்டாவுக்குத் தேறின
இப்படியாகத்தானே
பொங்கியது பொங்கல்.