(1)
இந்த வாழ்க்கையை எதன்பொருட்டு வாழ்கிறேன்
யாருக்காக வாழ்கிறேன்
அம்மா அப்பா கூறியதை
கிளிப்பிள்ளையென கேட்ட காலங்களும்
அவ்வப்போதான மீறல்களும்
சின்னச்சின்ன தண்டனைகளும்
நினைவின் மீன்கள் துள்ளி விழுகின்றன
மாமா அத்தை பாட்டி சித்தப்பா
கணவனென உறவுகளின் உரையாடல்
கொஞ்சமே கொஞ்சம் திமிறி எழுந்தால்
திரும்பும் பக்கமெல்லாம்
சாத்தானின் சாட்டைகள்
கத்தரி வெயிலில்
புங்கை மரநிழல் நோக்கி
நடக்கும் பாதங்கள்
புதிதாக தார்பூசிய தரையில்
செருப்பிலாமல் நடக்கும் வித்தைக்கான
பயிற்சி கூடியதில்
எம்மோடு
வழிபோக்கனாய்
பெரியாரும் அம்பேத்கரும்
பாதை திருப்பத்தில்
மார்க்சும் எங்கல்சும் இணைந்து கொள்ள
முன்னம் எழுந்த வினாக்கள்
அத்தனையும் புரட்டிப் போடப் பட்டன
விடுதலை
சமத்துவம்
சகோதரத்துவம்
ஜெய்பீம்
(2)
என்னைப் பார்த்து புன்னகைத்த
எல்லோரிடமும் புன்னகைத்தேன்
என்னைப் பார்த்து இமைக்காமல் முறைத்தவர்களிடம்
என் கண்கள் கோபத்தைக் காட்டியதில்லை
இந்த வெறுப்புக்கும் கோபத்திற்கும் காரணம்
என்னவாக இருக்கும் என்கிற
குழப்பத்திலும் அறியாமையிலும்
என்னிடமிருந்து ஆகக் கடைசியாய் வெளிப்படுவது
வெறுமை மட்டுமே
மனமே அன்பு செய் என
மீண்டும் மீண்டும் இதயத்திற்கு நெருக்கமாய்
எனக்குள் நானே கூறிக்கொள்கிறேன்
இந்த ஒற்றைச் சாளரம்தானே
இப்பெரிய வானத்தையும்
அலைகடலையும் தரிசிக்க உதவுகிறது
பறவைகள் தனக்கென எல்லையில்லை
என வருந்தலாமா?
விடியல் அதோ அங்கிருக்கும் இருளுக்குத்தான் தேவை
இலவம் பொதியென
மென் பறவையாகிப் பறக்கிறேன்
என் இறகுகளெங்கும் நட்சத்திரங்கள்
(3)
ஆணவக் கொலைகளுக்காக குரல்கொடுத்து ஓயவில்லை
ஆயுதத்தாக்குதல் மாணவர்கள் மீது
மக்கள் சமூக அடுக்குகளுக்கு மத்தியில்
ஆணவக் கொலைகளின் சீழ்
நிற்காமல் வடிகிறது
கூர்தீட்டப்பட்டு
தூக்கி பிடித்திருக்கும்
வீச்சரிவாளாக
ஆதிக்க மனோபாவம்
இன்னும் காவு வாங்க
எந்தெந்த அடுக்குகளின் மீது ஏவுமோ
ரத்த வீச்சம்
திக்கெட்டும்
வானொலி
தொலைக்காட்சியில் உரைகள்
அறிவுறுத்தலென
ஒலிக்கிறது
மணிப்பூரில்
பற்றியெரியும் நெருப்பு
இது பனிக்காலம் போலும்
தேர்தலை நோக்கியப் பார்வைகள்
அறுவடைக்கான திட்டமிடல்கள்
பஞ்சாலைத் தொழிலாளரின் மூச்சுத்திணறல்கள்
ஆடை அவிழ்க்கப் பட்ட திரௌபதிகள்
வீதிகளெங்கும்
ஆடைகளை இணைத்து வைத்து
ஒட்டுப்போட்டு தைக்க முடியாமல்
சிதறிக்கிடக்கிறது
மானுடம்.
(4)
சில நிமிடங்கள் மட்டுமே உன்னுடையவை
எஞ்சியவை நோய்மையுடையவை
அடர் ஜாமம் கிசுகிசுத்தது
பிரபஞ்சமே என்னுடையது
என்பாயே
ஒளியும் அதன் அலைவீச்சும் என்னுடையவை என்றேன்
ஜாமத்தின் வெட்கம்
விடியலின் கன்னக்குழிகளில்சிரிப்பு.
விடியலின் மழையோசை குளிர்மை
இன்னுமின்னும் மண்வாசத்தில்
குளிக்கும் பூமியே,
என் மகவே
(5)
என்ன செய்வேன் அம்மா
நீ நடமாடிய வீடு
நீ பயன்படுத்திய பொருள்கள்
உறங்கும் நேரத்தில் என்னை அழைத்து
தேநீர் கேட்கும் குரல்
இதோ நீ துடைத்துத் துடைத்து
சுத்தமாக வைக்கும் பலகனி
அதில் நித்தமும்
உன் போர்வையை வெயிலில் உணர்த்துவாய்
போர்வையற்று
உன் நடமாட்டமின்றி இருக்கிற
பலகனிக்கு சென்ற நிமிடத்திலேயே
வெறுமை சூழ்கிறது
உன்னுடனான உரையாடல்கள்
நினைவெங்கும் அலைமோதுகிறது
நீ இல்லாமல் பிரிக்கப்படாமல் இருக்கின்றது
மாதாந்திர இதழ்கள்
எனக்கு அடுத்த தலைமுறையோடும்
உன்னால் மகிழ்ச்சியாக உரையாட முடிந்தது
அதற்கும் அடுத்த தலைமுறையோடு
வண்ண பொம்மைகளோடு
விளையாட முடிந்தது
கொள்ளுப் பெயரன் புத்தகங்களோடும்
விளையாட்டு பொம்மைகளோடும்
காத்திருக்கிறான் அம்மா
நீ ஊட்டி வளர்த்த நாவின்
சுவை மொட்டுகளில் அம்மா என்ற சொல்லை
உச்சரிக்க எத்தனிக்கையில்
கண்ணீர் திரள்கிறது
என் அம்மா உனக்கு எத்தனை வயதானால் என்ன
நீ என் குழந்தை தானே அம்மா
உன்னிடம் தோற்கும் விளையாட்டொன்றில்
என்னை வீழ்த்திச் சென்றாயே