எஞ்சியிருக்கும் கூடு
வலுவிழந்துவிட்ட வார்த்தைகளின்
பிணக்கனம் தாளாமல்
திணறும் முழங்கைகளில் மேலேறுகிறது
அழுகிப்போய்விட்ட சத்தியங்களிலிருந்து
உதிரும் புழுக்கள்
நினைவுகளின் மிச்ச வாசனை
வக்காலத்து பேசுகிறது
அழுகலின் துர்நாற்றத்திற்கு
இரண்டுமே நுழைந்திடாத
குடுவைக்குள்
தன்னை பதுக்கிக்கொள்ளும்
சிதிலமடைந்திடாது பிழைத்திருக்கும் மிச்சம்
°°°
பழக்கப்படுத்தப்பட்டிருந்த புதிய பாதை
அறிந்திருந்த வார்ப்புகளின்
அறியா அச்சுகள்
விட்டுப் போயிருக்கிறது
என்றைக்குமான கோணல்களை
கடக்க நினைக்கும்
பாதங்களின் அல்லாட்டம்
வாதாடுகிறது
தனக்கான நியாயத்தை
பழைய கீறல்களுக்கு
புதிதாய் ரணப்பட்டுக்கொள்ளும் விதி
மீறலுக்கானது
போதுமென்கிற முடிவெடுத்தலுக்குப் பின்
ஒரே நீள அகலங்கள்
கரைக்கும் கடலுக்கும்