cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 38 கவிதைகள்

உன்னை அவர்கள் என்ன பெயர் கொண்டு அழைக்கிறார்கள்


உன்னை அவர்கள்
விசித்திரமான ஒரு படைப்பினத்தைப் போல
பார்க்கிறார்கள்
அவர்கள் எல்லோரையும் விட
சில விஷேடமான குணங்களோடு
நீ படைக்கப்பட்டிருக்கிறாய்
எப்போதும்
ஒரு குழந்தையின் கண்களால்
இந்த உலகத்தைப் பார்க்கிறாய்
அதிக மகிழ்ச்சியைத் தரும்
சின்னச் சின்ன விஷயங்களால்
உன் வாழ்க்கையை
நீ அழகாக்கி வைத்திருக்கிறாய்
உனது பெரிய பெரிய துயரங்களை
நீயாக உடைத்துக் கொண்டு வெளியேறுகிறாய்
யாரைப் பார்த்தாலும் சிரித்தமுகமாக
பக்குவமாகப் பேசுகிறாய்
இது அவர்களைப் பயமுறுத்துகிறது
ஹுருல் ஈன்கள் அளவுக்கு இல்லை
ஆனாலும் நீ அழகி என்று
நீயே நம்புகிறாய்
துயரத்தின் பாலைவனங்களில்
சுஜூதில்
அல்லாஹ்விடம் அழுகிறாய்
தொழுகை விரிப்பின் ஈரம் கணக்கிறது
எடையற்ற இறகு போல மிதக்கத்தயாராகிறது மனசு
ஒரு வலிமையான மரத்தைப் போல
நீ நிற்கிறாய்
உனது பிரதிபலிப்புகள்
உனது வேரின் வலிமையையும்
வளர்ச்சியின் அழகையும்
வெளிப்படுத்துகின்றன
பிறரைக் கொண்டாடிவிட்டு
வீட்டுக்கு தனியாக நடப்பவள் நீ
கை தட்டல் இல்லாமல்
உதயமாகிற சூரியன் போன்றவள்
எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல்
ஆக்ஸிஜனால்
உலகை நனைக்கும் மரங்களால் ஆனவள்
உனக்குப் பிடித்தமான பாதையில்
நீ பயணப்படுகிறாய்
இறைவனுக்கு மட்டும் பயப்படுகிறாய்
உன்னைச் சூழ்ந்திருக்கும்
மனிதகுலப் பார்வையாளர்கள் சொல்லும் குறிப்புகள்
கவனத்துக்குரியவை
இருக்கட்டும்
சிலபோது கத்தியைப் போன்றவை
இடைவெளி தராமல் அவை
உன் உணர்வுகளை மோதிக்கொண்டேயிருக்கும்
நீ
வாழ்தலின் இரகசியத்தைத் தொலைத்துவிடுவாய்
மன அமைதியும்
ஆரோக்கியமும் சிதைந்து போகாமல்
உன்னைப் பார்த்துக்கொள்.
நீ மிகச்சரியானவள் அல்ல
ஆனால் உண்மையானவள்
எப்போதும் உண்மையானவள்

உன்னை அவர்கள் என்ன பெயர் கொண்டு அழைத்தாலும்


About the author

றஹீமா பைஸல்

றஹீமா பைஸல்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website