1)
ஓர் இக்கட்டிலிருந்து தப்பிப்பதற்காகவே
அது நிகழ்ந்துள்ளது என்பதையறிய
கொஞ்சக் காலம் தேவைதான் போல.
இல்லையெனில் மற்றவர்களைப்போல்
அந்த இக்கட்டுப் புதைகுழியில்
காலம்பூராவும்
அடக் காலங்காலமாய்
கடமை உணர்வோடு அல்லவா
கிடந்திருக்க வேண்டும் தோழா.
பதவியும் வேண்டாம்
பொறுப்பும் வேண்டாம்
இந்த வட்டத்திற்குள்தான் நிற்க வேண்டுமென
யாரும் கட்டளையிடவும் முடியாதுதானே எனும்போது
நண்பன் திரைப்பட நாயகன்
மொழிப்பெயர்த்துக்க கூறும்
‘எல்லாம் நன்மைக்கே’ ஒலிக்கின்றது அரூபமாய்!
2)
சிலரைக் கவனியுங்களேன்
உங்கள் அனுபவத்திற்கு இதெல்லாம் ஈடாகுமா?
உங்களுக்கே அமையவில்லையெனில்
வேறு யாருக்கு அமையும்?
அதன் அச்சாணியே நீங்கள்தான்
நீங்களின்றி எங்கனம் நகரும்
ஆயிரம் நீங்கள்
ஆயிரமாயிரம் உங்கள்
அவ்வப்போது அடடா மாலைகள்
ஆங்காங்கே அபாரம் அபாரமென கோஷமிடுபவர்களிடம்
கவனித்திருக்க மாட்டீர்கள்
உங்களுக்குத் தெரியாமலேயே
உங்கள் நீள அகலத்திற்கு
நீங்கள் எந்தச் சிரமமுமின்றிப் படுக்க
மிகச் சரியான குழியைத் தோண்டியிருப்பார்களென.
நீங்கள் சூரியனைப் பார்த்துக்
கண்கள் சுழிக்கும் மீச்சிறு இடைவெளியில்
உங்கள் கால்களை இடறி விடுவது மட்டும்தான்
அவர்களது அடுத்தகட்ட நடவடிக்கையாகவும் இருக்கும்.
ஆகையால் கவனம் அவசியம்
உங்களது உண்மையான உழைப்போடு
உச்சக்கட்ட எச்சரிக்கையும் நல்லது.
3)
சந்து பொந்துகளில் நுழைந்து
எங்கோயிருக்கும் நிலக்கடலையைக் கண்டறியும்
பெருச்சாளிகளுக்கு
கடலைமேல் அவ்வளவு அக்கறையா என்ன?
அப்படிதான் நலம் விரும்பிகளென்று
நினைத்துக் கொள்பவர்களும்
முகவரி மறைக்கப்பட்ட வீட்டைத் தேடி
அழையா விருந்தாளியாய் வந்து
ஏதேதோ நியாயக் கதைகள் கூறுவர்.
குழப்பத்தில் பூவா தலையா எல்லாம்
போட்டு முடிவு செய்யாமல்
அப்பட்டமாக நம்பிவிடுங்கள்
அவர்கள் உங்கள் நலம் விரும்பிகள்தானென்று.
வாதிட்டால்…..
அறிவுரைகள் பலவற்றை வேறு
கூறித் தொலைப்பார்கள்.