(1)
நேத்துக் கொடுத்த பணத்துல
மீதம் இருக்குமே.அதைக் கொடு என்றபடி
கொடுத்த பணத்தைத் திரும்ப
அப்பா வாங்கியதும்,
கணக்குக் கேட்கிறாரே என்ற ஆதங்கத்தில்
பொங்கியது கண்ணீர்.
கதவைத் திறந்ததும்
வெற்று மேலுடலை
அப்படித் தழுவி இறுக்கியது
நேற்றிரவின் மழையில்
சொட்டச் சொட்ட நனைந்திருந்த காற்று.
மறைப்பிற்குப் பின்னால் ஒளிர்ந்து கொண்டிருந்தன
பழனி மலைக் கோவில் விளக்குகள்.
வண்ணாத்திக் குருவியின் பாடலொலியில்
அதிர்ந்ததிர்ந்து புலர்கிறது பொழுது.
ஏதோ சொல்ல வந்த ஃப்ராய்டிடம்
கையமர்த்திச் சொன்னேன்.
ரொம்ப நாளைக்கப்பறம்
அப்பாவைப் பாத்தது சந்தோஷமாஇருக்கு.
அது போதும்.
புன்னகைத்தபடி
வெளிர் இருளில் அவர் கரைந்துபோக
விரிசிறகுகள் சுருக்கி
வயலிலமர்கிறது கொக்கு.
(2) நீல மனிதர்கள்
சலிப்பூட்டும்படி காணக் கிடைக்கிறார்கள்
பால்யத்தில்
புதர்களில் மறைந்து பார்த்திருந்த நீல மனிதர்கள்.
வீடுகளில்,அலுவலகங்களில்
ஆதி விளையாட்டொன்றை
சலிப்பின்றி நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்
அவர்கள்
கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆசுவாசப்படுத்துகிறார்கள்
வக்கிரப்படுத்துகிறார்கள்.
குற்றவுணர்வைத் தூண்டுகிறார்கள்
நம்முள் சதா உறுமும் மிருகமொன்றின்
பிடரி மயிர்களைக் கோதியபடி
அதற்கு இரையளிக்கிறார்கள்
நானும் வீடும் மட்டும் தனித்திருந்த
நேற்றிரவில்
அசைந்து கொண்டிருந்தவர்களைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அசைந்தோய்ந்த பின்
அத்தனை பேரும் சிரித்தபடி
ஒரே குரலில் சொன்னார்கள்
நாங்கள்
உன் அப்பாவைப் பார்த்திருக்கிறோம்.
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
உன் மகனை,பேரனை என
உன் வம்சச் சங்கிலியின்
அத்தனை கண்ணிகளையும் பார்ப்போம்.
அதிர்ந்து
கண்களை இறுக மூடிக் கொண்டேன்
(3)
கழுகுகள் வட்டமிட,
அடி வானில் பெரு மழை இறங்கியிருக்க,
பராந்தக நெடுங்சடையான் ஆட்சிக் காலத்தில்
உருவான சமணர் பள்ளியை,
150 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை
வட்டெழுத்துக் கல்வெட்டுகளை
பிரமிப்புடன்,பரவசத்துடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கோடிகளில் ஒருவனான என்னை
தீர்த்தங்கரர்களும்
கழுகுமலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னையும்,சிற்பங்களையும் பார்க்காமல்
அல்லது பார்க்க அவசியமில்லாமல்
தாத்தாச் செடி மலரின் தேனை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது வெந்தய வரியன்