கூட்ட நெரிசலால்
என்னை நெருங்க முடியாமல்
உன் உள்மனதால் என்னோடு
ஏதோ பேசிவிட்டுச் சென்றாய்
மக்கள்திரளின் பேரிரைச்சலில்
நீ பேசியது
என் நிழல் வரைதான் எட்டியது
என் மனம்வரை எட்டவில்லை
இன்னும் ஒருமுறை சொல் என்றார்
பிரபஞ்சவெளியில்
ஏதோ ஒரு புள்ளியிலிருந்து
இறங்கி வந்த
இரக்கமே வடிவான இறைவன்
பசுமரத்திலிருந்து உதிர்ந்த பூவிதழ்
காற்றோடு என்ன பேசுமோ
அதைத்தான் பேசிவிட்டு சென்றேன்
என்றான் மனிதன்
சற்று விளக்கமாக கூறுக என்று
அன்புக் கட்டளையிட்டார் இறைவன்
அதற்கு இணங்கி
விளக்கிக் கொண்டிருந்தான் மனிதன்
தன் ஒளிவட்டத்தை அணைத்துவிட்டு
உறங்கிவிட்டார் இறைவன்
அதற்குப் பிறகுதான்
உணர்ந்தான் மனிதன்
அது வெறும் கனவு
கல் உருவாக இருந்தபோது
நெருங்க முடியாதுபோன கடவுள்
தன் கண்ணுக்குள் கனவுருவாய்
நெருங்கி வந்த பெருமகிழ்ச்சியோடு
அன்றைய விடியலைக்
கண்டான் மனிதன்
அதற்கு முன்பு
அப்படி ஒரு விடியலை
அவன் கண்டதே இல்லை
ஆனால் ஏனோ
அது போன்ற ஒரு விடியலை
தன் வாழ்வில் மீண்டும் காண
அவன் விரும்பவும் இல்லை
வாய்ப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. 🙏