ஞானத்தெளிவு
குமட்டும் மணத்துடன்
கூடிய நெடுங்காலமூறிய
சாராய நெடியுனை
இவ்வளவு தொந்தரவைத்
தருமெனத் தெரிந்திருப்பின்
முதல் நேர்விலேயே தவிர்த்து
முதல் மிடறிலேயே வெளித்தள்ளியிருப்பேன்
உள்ளிருந்து சலசலத்தது
போதுமெனத் தெரிந்துதான்
ஒவ்வாமையாய் வெளித்தள்ளினேன்
மூளை கபாலயிடைத்திரவத்துள்
நிரவிய மது வீர்யம்
சபலத்துகள் சொற்கள் வழி
பிதற்றிக்கொண்டேயிருக்கிறது
எரியும் ஈரக்குடல்
விரிந்து பரவும்
வன்சொற்களில்
தெரிந்தேதான்
சிதைக்கின்றேன் இவ்வுடலை
மிடறு மிடறாய்
உள்ளருந்த
போதை மறைத்தது
இடறு இடறு என்ற
உள்மனத்தெளிவை
மாயப் பிசாசென
விரித்த சூன்யவலைக்குள்
வீழாத சிலந்திகளை
நானறிந்த வேளைகளை
குரூரத்தின் சிறகுகளால்
மூட நினைத்தவுன்
மூடத்தனத்தனத்தை நகைக்கிறேன்
உளவின் விழிகள்
உற்றுநோக்குவதை யறியாதபடிக்கு
ஊற்றிக் குடித்தபின்
உளறிக்கொண்டிருக்க
நானென்ன மதுமோகனனா?
வெகுமானம்
அவமானப்படுவோம்
எனத் தெரிந்தே
அவமானப்படும்போது
விலகியோடுகிறது
தன்மானம்.
அவமானப்படுத்தியதாக
எண்ணுகையில் ஒரு
புன்னகையோடு
கடந்து செல்கிறேன்
அவமானப்பட்டது நானல்லனென்று.
உங்கள் இழிசெயலைச்
சுமந்து திரிய விருப்பமில்லை
நான் என்பது
நான் அல்லன்
நான் பூண்டிருக்கும் வேடமே
இப்போதைய நான்
எப்போதைக்குமான
நான்
எப்போது வெளிப்படுவான்
எவ்விதம் வெளிப்படுவான்
என நானுக்கே தெரியாததால் அவமானப்படுத்துதல்களை
நிறுத்துதல் நலம்.
எல்லா அவமானங்களுக்கும்
பதிலாக
ஒரு வெகுமானம்
இதோ
விரைவாக வந்து கொண்டிருக்கிறது .