(1)
தேநீர் போடும் பெரியவரின் கைகளை
மேலும் நடுங்கவிடும் மழை !
நவம்பர் கடைசியில்
மாநகரம்
சோம்பலை
எவ்வளவு முடியுமோ
கை நிறைய அள்ளி
உடுத்திக் கொள்கிறது
தூக்கத்தில்
எழுந்து நடப்பவர்கள் போல்
ஆமையாகின்றனர் அனைவரும்
மேட்டில் இருந்து சறுக்கும்
வண்டிகள் போல
வேகத்தை எவரும் கூட்டாமலே
தானாய் போகின்றன வாகனங்கள்
எப்போதும் விட
அளக்கும் கை
பூக்கார அக்காவுக்கு
இன்று நீளமாகிவிடுகிறது
பேருந்துக்காக காத்திருக்கும்
நடுத்தர வயது பெண் ஒருத்தி
சொட்டிக் கொண்டிருக்கும்
மழையை பார்த்தபடி இருக்கிறாள்
சட்டென
அவள் இளமையில் தொலைத்த
பாடல் ஒன்று
உதட்டோரம் வந்து விட்டது
முணுமுணுக்கத் தொடங்குகிறாள்
சொட்டிய மழை
சடசடவென கொட்ட ஆரம்பித்துவிட்டது
பள்ளி முடிந்து வீடு திரும்பும்
சிறுவன் ஓடத் தொடங்க
அவன் தலைக்கொரு
ஜவ்வு தாள் கவரைத் தர
பின்னோடும்
காற்றும்
சேர்ந்து நனைந்து விட்டது
இத்தனைக்கும் இடையே
முதல் காட்சியை
கவனிக்கத் தவறிவிட்டேன்
மாமழை செய்யும் வேலையா அது!?
(2)
அப்பா இறக்காமல் இருந்திருந்தால்
என்று ஒரு பெண் பேஸ்புக்கில் எழுதியிருந்தாள்!
அப்பா இறக்காதிருந்திருந்தால்
இந்த பூமி எத்தனை டிகிரி
சாய்வாய் சுற்றிக் கொண்டிருக்கும்
அவள் கூறத் தொடங்கினாள்
நள்ளிரவில் ஊர் திரும்பும்போதும்
எனக்கு மிகவும் பிடித்த கடை
பரோட்டா வாங்கி தந்திருப்பார்
பத்து நூறு ரூபாய்க்கு
நான் வேலை முடித்து திரும்பினாலும்
என்னை நடக்கவிடாமல்
ராணிக்கேற்ற
வண்டியில் அழைத்து வருவார்
மாதவிலக்கு நாட்களில்
சாப்பிட்ட தட்டை கூட
அவரே எடுத்துச் செல்வார்
நட்சத்திரங்கள்
கூடுதலாக இருக்கும்
வானத்தைக் காட்டாமல்
அந்நாளில்
உறங்க சென்றிருக்க மாட்டார்
அயர்ந்து தூங்கும்
பிள்ளைகளின் கன்னத்தில்
அவரின்
முத்த தடம் இல்லாத இடத்தை
தேடினாலும்
கிடைக்காது செய்திருப்பார்.
இதம் பதம் சுகம் …..
கவிதையும் வாசிப்பும் அழகு.