இன்னும் சில நிமிடங்களே உண்டு விசாரணைக்கு
அவர்கள் கேள்விகளைத் தயார்ப்படுத்திக் கொள்வார்கள்
நீங்கள் பதில்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
எப்போதும்
எதிரெதிர் துருவங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன
இரவென்றால் பகல்
ஒளியென்றால் இருள்
கூட்டல் என்றால் கழித்தல்
அரசு என்றால் குடிமக்கள்
குழப்பம் என்றால் தெளிவு
இணைவு என்றால் பிரிவு
கேள்வி என்றால் பதில்….
முதற் கேள்விக்கு
இதோ முதலாவது பதில்..
பந்துகள் வீசப்படுகின்றன
ஒன்றின்பின் ஒன்றாக
பந்துகள் வந்து கொண்டேயிருக்கின்றன
துடுப்பாட்டக்காரனை நோக்கி.
எத்தனையாவது பந்தில்
விக்கெற் விழும் என்று
வீசுவோருக்கும் தெரியாது
தடுத்தாடும் உங்களுக்கும் தெரியாது
விக்கெற்றை வீழ்த்த முடியாமலும் போகலாம்…
கண்ணீரால் நிரம்பிய
மாபெரும் கிண்ணத்தின் முன்னே அமர்ந்திருக்கிறேன்
படுக்கையின் அருகிலும்
தளும்பத் தளும்ப அந்தக் கிண்ணமே உள்ளது
சந்தேகத்துடன் பார்க்கும் உங்களுக்கு
“அது வேறொன்றுமில்லை
அருந்துவதற்கான கோப்பிக் கிண்ணம்” என்றும்
‘சுவையான தேநீரெ”ன்றும்
நிரூபிக்க வேண்டியிருக்கிறது
அதுவும் சரிதான்
தினமும் அருந்திக் கொண்டிருப்பவளிடம்
வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும் உங்களால்
அருந்திக் கொண்டிருக்கிறேன்
முடியட்டும் இந்தக் கிண்ணத்தில் நிரம்பிய
கண்ணீரெல்லாம்,
முடியட்டும் இந்தக் கண்ணீரின் காலமென்று
ஒருநாள் இந்தக் கிண்ணத்தை உடைப்பேன்
சிதறிப் போகும் அப்போது
துயரத்தின் முத்துகளெல்லாம்
பேருந்திலிருந்து இறங்கியதும்
வரவேற்றுக் கைகளைக் குலுக்கினேன்
நெஞ்சோடணைத்து நெருக்கத்தைக் காட்டினாய்.
அந்தச் சந்தியில்
அவரவர் சோலிகளோடு அவரவர்
அருகிலுள்ள கடையில்
தேநீருக்காக அழைத்துச் சென்றபோது
“நினைவோ… ஒரு பறவை…
விரிக்கும் அதன் சிறகை… ”
பாடல் ஒலிக்க
திரும்பினாய்
முப்பதாண்டுகள் எங்களின் காலமும் திரும்பியது
“….ரோஜாக்களில்.. பன்னீர்த்துளி… வழிகின்றதேன்…
அது என்ன தேன்..?..”
“அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்…?”
நீர் திரளும் கண்களை
இப்போதும் வேறு பக்கம் திருப்பினாய்
எந்தப் பக்கமும் திரும்ப முடியாமல்
இப்போதும் நான்
பாடல் முடிந்தாலும் முடியவில்லை நினைகளின் அதிர்வலைகள்
பருகப்படாத தேநீரின் முன்னே
எதிரெதிராக நாம்
ஆம்,
இப்போதும் கூட அப்படியேதான்…