- அதிகாரத்திற்குக் கையடித்து விடுதல்
மேற்கூரை இடிக்கிறது என்றேன்
உன் உயரத்தைக் குறை என்றார்
கழிவறையில் நீர் வரவில்லை என்றேன்
இரைப்பையை உலரப் போடு என்றார்
நாற்காலிக் காலொடிந்தது என்றேன்
உன்னிடம் இரண்டு உள்ளனவே என்றார்
திறந்த கதவைத் திறந்து விடச் சொல்வது ஏன் என்றேன்
உனக்கு மூடவே தெரியவில்லை என்றார்
வரவேற்பறையில் எலிநாற்றம் என்றேன்
மூக்குத் துவாரங்களைச் சோப்பு நீரால் கழுவு என்றார்
ஓர்நாள் அவரின் நுனி மூக்கில் ஈ ரீங்கரித்தது
ஐயோ! உடம்பெங்கும் மின்சாரம் பாய்கிறது என்றார்
தூரத்தில் எங்கோ நாய் குரைத்தது
தொப்பூளைச் சுற்றி ஊசி போட்டுக் கொண்டார்
கலிபோர்னியக் காட்டுத் தீயில்
தன் வீடும் பற்றி எரிகிறது என
அலறி ஓடுகிறார்
அதிகாரத்தின் குஞ்சை வருடும் மேலாளர்
வலுக்கும் மழையில் வெளி
- வயிரற்ற இரைப்பை
பசியில் மெலிந்த இரைப்பை
தேங்காய் கொறிக்கும் குரங்கின் முன் நின்றது
குரங்கோ, உன்னிடம் வாலில்லை என்றது.
வெண்ணைய் தின்னும் காட்டு யானையின் முன் நின்றது
யானையோ, உனக்குத் தும்பிக்கையில்லை என்றது.
மானின் புள்ளிகளைத் தின்னும் புலியின் முன் நின்றது
புலியோ, செம்மஞ்சள் தோலும் கருங்கோடும் இல்லை என்றது.
காட்டைத் தின்னும் மாட்டின் முன் நின்றது
மாடோ, உனக்குக் கொம்புகளில்லை என்றது.
எலும்புகள் கடிக்கும் நாயின் முன் நின்றது
நாயோ, உனக்குக் குரைக்கத் தெரியவில்லை என்றது.
இறுதியாக, மனிதரைத் தின்னும் மனிதரிடம் நின்றது
உனக்கு வாயுமில்லை வயிறுமில்லை என்றார்.
- கனவுகளில் பணிக்குச் செல்பவன்
பணியிழந்தவன் எந்த மாமிசத் துண்டால்
ஞாயிற்றுக்கிழமைச் சூரியனைத் திறப்பான்?
ஒரு கறித்துண்டுக்கு ஏங்கித் தவிக்கிறாள் மகள்
மகனோ, மீன் என்கிற வார்த்தையை
வறுக்கச் சொல்லிக் கெஞ்சுகிறான்
அடுத்த வாரம்
தெரு மணக்கக் கறிசமைப்போம் என்கிறார் அப்பா.
இப்படித்தானே போன வாரமும் சொன்னீங்க?!
அலுவலகம் புறப்படும் தந்தை
பணியிழந்த கதையை இன்னுமா சொல்லவில்லை?
கனவில் பணிக்குச் செல்பவர்
விடிந்ததும் பணிநீக்கம் செய்யப்படுவாரோ?
- விசுவாசமற்ற நாய்
விசுவாசமற்ற நாயென்று
என் கால் நரம்புகளை உற்றுப் பார்த்தனர்.
சற்றே வளர்ந்த நகங்களோடு
பாதங்களையும் நறுக்கிவிட்டு
நாக்கை ஊன்றி நடந்தேன்.
விசுவாசமற்ற நாயென்று
கண்களைப் பிடுங்கப் பார்த்தனர்.
தாடியை மழிக்கும் போது
முகத்தையே மழித்து விட்டு
தொப்புளால் பார்த்தேன்.
விசுவாசமற்ற நாயென்று
தொண்டையை வெடிக்கப் பார்த்தனர்.
சொத்தைப் பல்லைப் போல்
குரல்வளையையும் பிடுங்கி விட்டு
முதுகெலும்பால் பேசினேன்.
விசுவாசமற்ற நாயென்று
கபாலத்தைக் கடப்பாரையால் தட்டினர்.
முடிவெட்டுவது போல்
மூளையையும் கத்தரித்துத்
திருவோட்டினால் சிந்தித்தேன்.
விசுவாசமற்ற நாயென்று
விரைத்த புடுக்கையே பார்த்தனர்.
பழத்தைப் போல் உரித்துத் தின்று
வானோக்கி நடுவிரலை நீட்டினேன்.
அனைத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட
விசுவாசமற்ற நாயொன்று
குரைத்துக்கொண்டிருக்கிறது
அன்றாடச் சூரியனையும்
அமாவாசை நிலவையும் பார்த்து
வேறொன்றும் செய்யவில்லை
“உம் பற்கள் ஏன் ரத்தத்திலேயே ஊர்கின்றன?
முதுகெலும்புகளை யாருக்குக் கைத்தடியாக விற்கிறீர்?
குடிநீர்க் குவளையில் என் ரத்தத்தையும்
உணவுத் தட்டில் என் எலும்பையும்
பசியாற்றச் செய்வதேன்?” என்றுதான் கேட்டேன்.
ஒட்ட என் வாலறுத்த முதலாளிகளிடம்
- குனிந்த ஓவியம்
ஆண்டைக்கு எப்போதும்
தன்னருகில் ஓர் அடிமையை வைத்திருக்க ஆசை.
தன் நிலத்தில் கரும்பு விளைவித்தவனை
அதன் தோகையைப் போல் குனிந்தே இருக்கப் பணித்தார்,
இப்போது நிலமுமில்லை விளைவிப்பவனுமில்லை. ஆனாலும்
குனிந்தே இருப்பது போன்ற ஓர் உருவத்தை வரையச் சொல்லி
அதை உற்றுப் பார்த்தபடி
தன் வாழ்வைக் களிக்கிறார்.
அருமை!