முன்பொரு காடிருந்தது..
வேட்டை நினைவோடு டி.என்.ஏவில் படிந்துவிட்ட
மஜ்ஜையின் நகலாகும் அனுபவத்தை
நிரவிக்கொள்கிறேன் ஒருமுறை
அகால வருகைகளின் பின்புலத்தில்
அழுத்தம் கொடாதத் தருணங்களை
வேவு பார்க்கும் தன்மையுடன் ஏவி விடுவதில்
மனத்தின் குளம்படிச் சத்தம்
இரவு நீவிய வால்நுனியாகக் கனவுகளின்
வாயிலில்
கால் மாற்றி காலென நின்றது நின்றபடியே துடிக்கிறது
வெகுகாலம்
நல்வாய்ப்பை நாடி இதுகாறும் காத்திருக்கும் பேதமையை
நொந்து பகிர்ந்துகொள்ளவே உன்னையும்
அழைத்திருந்தேன்
ஆளுக்கொரு துண்டு
என்பது
கச்சிதமான ஏற்பாடுதான்
●●●
ஒலித்தடம்
துரோகம் தந்துவிட்டுப் போயிருக்கும் தோலின் வடு
தடித்திருக்கிறது
ஒரு பழைய சொல் கொண்டு அதை நிரடி நிரடி
மௌனிக்க முடியாமல் தவிக்கும்
மனத்தின் வேர்களில் மூச்செறிகிற அமைதியிழையை
காயம் படாத இடது விரல்களில்
அவ்வப்போது சுற்றிக் கொள்கிறேன்
இன்னும் கொஞ்சம் தொலைவு
நடந்து பார்த்திருக்கலாம்
கண்ணுக்குத் தட்டுப்படுகிற புதிய நம்பிக்கைகளை
அனாவசியமாக சந்தேகங்கொள்ளும்
தைரியத்தை இப்போதும் இழந்திருந்தேன்
இன்னும்
கொஞ்சம் தொலைவு நடந்து பார்த்திருக்கலாம்
துயர் அழுத்தும் நெஞ்சுக்கூட்டுக்குள்
பின்னிரவு முழிப்புகளில் பயங்கரமாய் கேட்கிறது
பறவைகள் உதறும் இறக்கை சத்தம்
நெஞ்சக் கூட்டுக்குள்
அபகரித்துக்கொள்ளப்பட்ட பழைய காரணங்களின் மீது
எதன்பொருட்டும்
புகார்களை எழுதி ஒட்டும் பழக்கத்தை
கைவிடும் தன்முனைப்புக்காக
அனுதினமும் ஏங்குகிறேன்
கண்களுக்குள் நுழைகிற துர்இருள் கவிந்து
பரவி
பார்வையை மூழ்கடிக்கும் அத்தனை முகங்களும்
ஒரே அச்சில் வார்த்ததைப் போல
ஒரே திக்கை வெறித்துக்கொண்டு ஏனோ
சிரிக்கின்றன
பாதங்களின் கீழே நடுக்கமுறும் பாதைகளை
சமைத்திருக்கும்
எண்திசைகளையும் தொட்டுக்கொண்டிருக்கிறேன்
அவமானத்தின் நெடும்பயண ரேகையிலிருந்து
பிரிந்து தனித்துக் கிளைத்து சுரக்கும் புத்தியில்
வெப்பக்காற்றின் அணுக்கத்தோடு
அரை மில்லிமீட்டர் கரைகிறது
வடு
●●●
உபரிகளின் பள்ளத்தாக்கு
சுழிந்து விரியும் அல்ட்ரா ஒலிநீரலையின் மையத்துக்குள்ளே
விழுந்துவிட்ட உழைப்பின் விரல் நுனிகள்
மாயவுலகின் பழமை ஏய்த்த வாயிலைச் சுரண்டுகின்றன
வேறொரு நூற்றாண்டுக்கான
சமிக்ஞையை
நிலைத்தகவல் குறியீடுகளாய்
தொடர்ந்து பெற்றுக்கொண்டேயிருக்கும்
உயரழுத்த பாதுகாப்பு புதிரிழைகளைப் பதிவு செய்யும் பணியிலிருந்து
விலக்கப்பட்ட விரல் நுனிகளின் சொந்தக்காரன்
விசாரணை அறையில் காத்திருக்கிறான் வெகு நேரமாய்
எதிரில் வந்தமரும் செயற்கை நுண்ணறிவின்
யுவநவீன ஸிந்தடிக் வாயின் புன்னகையற்ற இறுக்கத்திலிருந்து
வெளிப்படும் விஷயத் துல்லியத்தையே நோக்குகிறான்
தொடக்கக் கால வரலாற்றுப்பிழை நிகழ்வுகளை
ட்ரிலியன் ப்ராஸஸ் நுணுக்கத்தில் ஆய்ந்தறியும் முறையிலுள்ள
மேனுவல் இடர்களை
பிரிண்ட் அவுட் எடுத்துப் பாதுகாத்திருக்கும் கோப்புகளினூடே
நசிகிறது அவன் முகம்
பன்முகச் சேவை வரியோடும் கவலைப் படிகளில்
பின்னர்
மெல்ல இறங்கிப் போவான்
இவ்வமைப்புக்கு பயனற்ற ஒருவனாய்
●●●
பொழுதாகாமல்..
மெட்ரோவின் எக்ஸ்கலேட்டரில் உயர்ந்து
பின் மறையும்
சிரிப்பொலிகளில்
சுருங்கிக் கிடக்கும் சாலைகளை
நீளமாகக் கடந்து
பிறரைச் சென்றடையும்
உத்தியில்
மருள்கிறது இந்நகரம்
Courtesy : Photo & Visual Creatives By Hussam Eissa