தயக்கம் பேரமைதி
அமைதியைக் கிழி
மூடப்பட்ட இச்சதுரத்தில்
புள்ளியைத் தேடுகிறேன்
புள்ளிகள் இப்போது புழக்கத்தில் இல்லையென
உதடுகள் சொல்கின்றன
செவிட்டு திசையே..
மேலுதட்டில் மச்சம் காண்
புள்ளிகள் பிறந்துவிட்டன என்றேன்
கைகள் வளைவைத் தேடின
புகை வளைந்து வழிந்தது
மேடான ஒன்றில் ஏறி
பிரசங்கம் செய்ய மனம் ஏவுகிறது
மேடென்பது என்ன
பள்ளத்திற்கு எதிரி
எதிரியின் எதிரி நண்பன்
எனக்கு யார் எதிரி
இதோ
எதிராக நிற்பவன்
அவனுக்கு எதிராக நான் நிற்கிறேன்
தலையை
உடலை
பக்கவாட்டில் சாய்ந்து பார்த்தேன்
அப்போதும் நான் எனக்கு
நண்பனாக ஆக முடியவில்லை
என்னுடல்
நான்காய் கீறிக் கிடக்கிறது
வயிற்றின் மேற் கீறலில் பூச்சிகள் ஊர்ந்து வெளியேற
கீழே புழுக்கள்
ச்சீ என்றேன்
பாதரசம் ரசமற்று பழித்தது
என்னை மீட்டுத் தர
ஒரு சப்தமிடு
ஓங்காரமாய் அது வளரட்டும்
குறுமிளகை வாட்டிய வாசனை
உன் குரல்
குரல்வளையில் நீந்தும் மீன்கள்
எம் செவி
கதவுகள் திறந்த பாடில்லை
சுற்றிச் சுற்றினாலும் சதுரம் வளையமாகாது
மண்டை வளைந்தது
முதுகு வளைந்து கால் விரல்களைப் பற்றிக் கொண்டது
நான் ரப்பர் பந்தில்லை
உலக உருண்டை
கருவிழிகளில்ச் சுழல கண்களுக்குள் பாய்ந்தேன்
மாய்ந்தேன்.