- பார்ப்பதன் பிழைகள்.
அதிகமாகிக் கொண்டிருக்கும்
அணுக்க தூரம்
அருகாமையில்
இருப்பதைப் போன்றதான
சுவாசித்தலில்
காட்சிகள்
யாவையும்
காண்பதென்னவோ
நீதான்.
அறிவுப் போதாமையின்
அலுப்பில்
உணர்வுகளை
மொழிபெயர்க்கும்
சாத்தியமிருந்தால்
காலமும்
தூரமும்
காட்சிப் பிழைதான்
எப்பொழுதும்
இணங்கிப் போன
கூட்டுறவில்.
பைத்தியங்களென
பார்த்துச்சென்ற
பலதும்
உணர்தலுக்குள்
விழும்பொழுதில்
புரியும்.
காதலுக்கு
கண் இல்லைதான்
மோகித்த
இம்மௌனத்திற்கு
முன்னாளென்பது.
- வழிமொழியப்படாத வலிகள்.
மனம் சிதைக்கும்
மாய வேலைகள்
நிகழ்கிறது
மட்டுப்படாமல்
பொழுதொரு
வண்ணம்
புதிதாக
புத்திகள் தடுமாற.
தொப்புள்க்கொடி
உறவென்றாலும்
துவழ வைக்கிறது.
பிற்போக்குத்தனத்தில்
நிறைந்த அன்பை
நிராகரிக்க முடியாமல்
தவித்து.
வாழ்ந்து சலித்தவர்கள்
வயதாகிவிட்டதாக
புரியலாம்
புண்ணியவதிகள்.
புருஷனின்
அசௌகரிய அவதியை
கடமையென.
பெற்றவள்
புரிய முயலலாம்
பொழுதெல்லாம்
மனைவியோடு மல்லுக்கட்டி
பக்கத்தில் படுப்பது சாத்தியமாவென
முன்னொரு காலத்து
முந்தானை வாசனைகளை
முகர்ந்தாவது.
மழித்த மயிர்க்குப்பையைக்
கிளருவதால்
கிடைக்காமல் போகிறது
தீர்வு
ஆணிவேரை அறியாமல் போன
ஆணவப் போக்கில்.
புத்தனாக
புறப்பட்டிருக்கலாம்
புன்னகை தவழும்
பிஞ்சுப் பிள்ளைகள்
கொஞ்சக் கிடைக்காமலிருந்தால்
கௌதம சிரச்சேதத்திற்கு.
என்ன செய்யலாம்
இறையே!
வழிமொழிய
யாருமற்று
வலிகள் சுமப்பதுதான்
இல்லறமென்றால்
விலா எழும்பை
அப்படியே
விட்டிருக்கலாம்
அப்போதே
நீ
துணையென
துயரத்தைத் தராமல்.
- பருவகால வாஸ்தவங்கள்.
கிளறிக் கொண்டே
இருக்கும்
இம் மனதின்
கரண்டியைத்தான்
காணோம்
கருகிடும்
தணலின்
தருணத்திலும்.
இடைவிடாத
நெடியில்
வறுபடும் பொருட்கள்
மாறிக் கொண்டேதான்
இருக்கிறது
விடுபட வழிகளற்ற
வேதனையாக
தகித்து.
அரிதென
வாய்க்கிறது
அனல் கூடிய
பொழுதுகளில்
ஆசுவாசம் கொள்ள
சில
பொருளற்ற
குளிர்தல்கள்
வாழ்க்கையொன்றும்
வஞ்சிக்கப்பட்டதல்லவென
சொல்வதற்கு
இந்நெடும்
பயணப் போக்கினிடையில்.