1. அவர்களின் கடைசி இரவு
புயல் காற்றும் அடை மழையுமான பின்னிரவில்…
தொழுவத்தின் மண் சுவர்
சன்னமான கீறலோடு அரித்துக் கொண்டது.
இருபத்தி மூன்று வெள்ளாடுகளையும் மீட்டு விடும் பொருட்டு
மளமளவென அவிழ்க்க தொடங்கினார் அப்பா!
மூத்த செவலையையும் கையில்
இரண்டு குட்டிகளோடும்
வெளியில் பாய்ந்து நொடி
கண் முன்னே மண் சுவர் தின்றது ஆடுகளை!
மிஞ்சியது மூத்த செவலையும்
இரண்டு குட்டிகளும் அப்பாவும்
சுடலை மாடனுக்கு நேந்து விட்ட
கருப்பன் பின்னங்கால்களிலும் கழுத்திலும்
சதை பிரிந்த படி கிடந்தான்
வெயிலுமுத்து அம்மனுக்கு நேந்து விட்ட
சுருட்ட கொம்பன் கண்கள்
மலர்ந்தபடி வயிறு பிளந்து கிடந்தான்
மிச்சம் உள்ளவைகளும் கிடந்தன
சுவரின் மண்ணும் மழைச் சகதியுமாக
விடியலின் பின் அனைத்தையும்
எங்களின் தென்னையின் பாதங்களில்
புதைத்து விட்டு திரும்பினோம்
கவர்மெண்டின் கால்நடை
நிவாரணத் தொகை என
ஆயிரத்து இருநூறு ரூபாயை
பஞ்சாயத்து பிரசிடெண்ட்
கொடுத்து விட்டு சென்றார்.
2. மருந்து
ஆற்றங்கரையில் இருந்து
தென்புறமாக பரவி வரும்
சவம் எரியும்
வாசனையை நுகர சொல்லுவாள் அம்மா
தீராத ஒற்றைத் தலைவலியை
தீர்க்க தானும் நீண்ட காலமாக
நுகர்ந்து கொண்டே இருப்பதாய் கூறுகிறாள்
சவம் ஏதும் வராத அன்றொரு நாளில்
தீரா தலைவலி பற்றிக் கொண்டது
அம்மாவிற்கு
அன்றிரவு முழுவதும்
நான் சவமாய் எரிந்து விட்டு
பின் வீடு திரும்பி படுத்துக் கொண்டேன்.
3. நெடி
பனங்கிழங்கு பிடுங்கும் பொழுது
அப்பாவின் மண்வெட்டியில்
சிக்கிய கணத்த எலியின் நெடி!
எப்போதோ விடிவதற்குள்
தோட்டத்தை நாசம் செய்த
பன்றியின் நெடியை
ஒத்திருக்கிறது!
“நெடி” யின் பட்டியலில்
என் செல்ல கிடாவின்
சிறுநீரும் ஒத்தது!!