1.கேரக்டர்
தரமதிப்பீடுகள்
புள்ளிவிவரங்கள்
கணக்கீடுகள்
ஆளுகையின் பதிவேடுகளாக
சாமானியரின்
நாளது வாழ்க்கை
பல கயிறுகளும் முடிச்சுகளும்
அவற்றின் ஓட்டங்களும் அதற்கிடையிலான
சிக்கல்களும் கடந்து
பயன்பாட்டிற்காக காத்திருக்கும்
கோரைப்பாயாக
பதிவேடுகளுக்கும்
வாழ்க்கைப் பயணத்திற்குமான தொலைவு
மைல்கல்களில் இல்லை
மதிப்பீடுகளிலும்
உறைந்து நிற்பதில்லை
பட்டுப்பூச்சியின் காத்திருப்பு
குயில் முட்டையின் தவிப்பு
ரெட்டைவால் குருவியின் சீற்றம்
கேரக்டர்
இதற்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது
கேரக்டர்
மானுடம்
கேரக்டர்
எல்லை மீறல்
கேரக்டர்
தர மதிப்பீடு
கேரக்டர்
சார்லி சாப்லின்
கேரக்டர்
கிலோ கணக்கிலும் இல்லை யுவரானர்
தராசு யாருடையது
எடைக்கற்கள்
யாரால் உற்பத்தி செய்யப்பட்டவை
நிறுவையின் நடு முள்ளை கவனிக்கும்
கண்கள் யாருடையவை
பூமியில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது
பார்க்கிறவர்கள்
தண்ணீர் சிந்திவிட்டது
தண்ணீர் வழிந்து ஓடுகிறது
கூச்சல் கேட்கிறது
இதோ
ஓடை
நதி
அருவி
காட்டாறு
2. தேர்வு
தேர்வுக்கான ஆயத்தங்கள்
பதற்றங்கள்
பழைய வினாத்தாள்களை புரட்டியெடுத்து வாசிப்பு
மனனம்
இது இம்பார்டெண்ட் இது தேவையில்லை
தேர்வு நாளில்
நேரம் நெருங்குகிறது
தேர்வறைக்கு வராத மாணாக்கருக்கு
செல்பேசி அழைப்புகள் எடுக்கப்படாமல்
திணறுகிற நேரத்தில் ஒவ்வொரு நாளுக்குமான
விழிபிதுங்கல்
ஸ்க்ரைப் எழுதுவது
அறை கண்காணிப்பு
வினாத்தாள்
விடைத்தாள்
கொடுப்பது
பெறுவது
நோய்மை
விபத்து
தேர்வு குறித்த அச்சம்
தேர்வை ஒதுக்கும் மனநிலை
தேர்வு எதற்காக
யாருக்காக
தேர்வென்பது இங்கு
தேர்தல் போல தேர்வு இப்படி இருக்கும்
இப்படி எழுது
இப்படியாக இரு
அச்சத்தில் கொஞ்சம் உறைந்து போ
புறக்கணிப்பில் வெகுண்டெழு
புறக்கணித்தவரின் புறக்காரணி?
அகக் காரணி?
தேர்வென்பது
மொசக்குட்டி கையில் கிடைத்த
சின்னஞ்சிறு கேரட்
கொறிக்கப் படுவதுபோல
ராப் இசையைப் பாடுபவனின்
குரல் உயர வெடுக்கென தோன்றும்
நளினம்போல
தேர்ந்த கருவி இசை
காற்றில் கரைதலென
அச்சம்
பயம்
பதற்றம்
அதற்கான
பரப்புரை
எல்லாம்
காலத்தில் கரைந்தொருநாள்
குறிஞ்சி பூக்கட்டும்
3
நினைவுகளில்
அசைபோடும் நிகழ்வுகளை
சீட்டுக் கட்டுகளைபோல
அடுக்கி வைக்கிறேன் ஒன்றன் மீது
மற்றொன்று என
உறக்கமற்ற இரவுகளில்
தொலைதூரத்தில்
திடீரெனக் கேட்கும்
பறவையின் ஓசை
அதன் பாதுகாப்பற்ற
தன்மையின் வெளிப்பாடா?
நிலவு முழுமையாக ஒளிர்கிறது
சாலையோர மின்விளக்கின் வெளிச்சத்தில்
வேப்பமரம்
அசைவதைப் பார்க்கிறேன்
அதனடிப்பாகத்தில் மஞ்சளும் குங்குமமும் வைத்த வழிபாட்டுத் தடங்கள்
வீட்டு வழிபாடுகளில்
நடுவீடு வைக்கும் வழக்கம்
கட்டபாரையும் மம்பட்டியும்
வீச்சரிவாளும்
ஓரத்தில்
மெட்ரோ ரெயிலுக்கான வேலை நடக்கிறதாம்
வீட்டுச் சுவரில் ஆங்காங்கே விரிசல்கள்
4
என்ன செய்வேன் அம்மா
நீ நடமாடிய வீடு
நீ பயன்படுத்திய பொருள்கள்
உறங்கும் நேரத்தில் என்னை அழைத்து
தேநீர் கேட்கும் குரல்
இதோ நீ துடைத்துத் துடைத்து
சுத்தமாக வைக்கும் பலகனி
அதில் நித்தமும்
உன் போர்வையை வெயிலில் உணர்த்துவாய்
போர்வையற்று
உன் நடமாட்டமின்றி இருக்கிற
பலகனிக்கு சென்ற நிமிடத்திலேயே
வெறுமை சூழ்கிறது
உன்னுடனான உரையாடல்கள்
நினைவெங்கும் அலைமோதுகிறது
நீ இல்லாமல் பிரிக்கப்படாமல் இருக்கின்றது
மாதாந்திர இதழ்கள்
எனக்கு அடுத்த தலைமுறையோடும்
உன்னால் மகிழ்ச்சியாக உரையாட முடிந்தது
அதற்கும் அடுத்த தலைமுறையோடு
வண்ண பொம்மைகளோடு
விளையாட முடிந்தது
கொள்ளுப் பெயரன் புத்தகங்களோடும்
விளையாட்டு பொம்மைகளோடும்
காத்திருக்கிறான் அம்மா
நீ ஊட்டி வளர்த்த நாவின்
சுவை மொட்டுகளில் அம்மா என்ற சொல்லை
உச்சரிக்க எத்தனிக்கையில்
கண்ணீர் திரள்கிறது
என் அம்மா உனக்கு எத்தனை வயதானால் என்ன
நீ என் குழந்தை தானே அம்மா
உன்னிடம் தோற்கும் விளையாட்டொன்றில்
என்னை வீழ்த்திச் சென்றாயே