என்னிடமிருந்தும் இல்லாமல்..
துயரம் அழுந்தும்போது தோள்கள் இளகி
வாகாக ஒரு நினைவைத் தாங்கிக் கொள்கின்றன
நிபந்தனைகள் எதுவும் அவசியமாகவில்லை
ஒரு நேர்க்கோட்டின் நடுவழியில் பதற்றத்தோடு உதறிச் செல்ல
வைராக்கியம் மிக்க சொற்களை
கைவசம் வைத்திருக்கிறேன்
புடைத்து வீங்கிய சூழ்நிலைகளின் அசௌகரிய இடர்களை மீறி
உருண்டு முனை மழுங்கிய அவமானங்களின்
வெப்பம் அமிழ்கிறது
தன்னிரக்கத்தின் குமிழ் உடைய
மெல்ல
மெல்ல
தனிமையின் அடிமடியில்
இன்னுமோர் முறை
நீயுன்னையே அழைத்துப் பேசியிருக்கலாம்
விடுபட்ட பாதையின் திசையில்
நைந்து கிடக்கிறது ஒரு பழைய நம்பிக்கை
இனியும் அதை நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதாக
பொருக்குத் தட்டின புண்ணில்
எப்போதாவது மொய்க்கிறது
ஒரு புதிய வலி
●●●
கடைசி வரையில்..
நீங்கள் நடத்தும் அத்துமீறலைக் கண்டுகொள்ளும் மூட்
சுத்தமாய் கிடையாது
முன் தீர்மானம் ஓவர் திங்கிங் போன்ற
நோய்மையை சுமந்தலையும் உங்களின்
பிஸியான நிமிடங்களை
என் வாசலில் ஒட்டிவைத்து விட்டு
இதென்ன வேடிக்கை
ஆல்ரெடி
ஒப்பற்ற யோக்கியதையோடு மல்லுக்கட்டி
அனுதினம் நிரூபித்துக்கொள்ள
நெருக்கடி ரேகையொன்று முகம் முழுவதும் படர்ந்து
வெம்பி வெடித்திடும் தருணம் பார்த்திருக்க
முதலில் ஹாரன் அடிப்பதை நிறுத்துங்கள்
சகோ
ஜன்னலோர இருக்கையில் சாய்ந்தபடி அசந்து தூங்கிவிட்ட
சமூகநாயகத்தை
எதற்கு வீணாய்த் தட்டி எழுப்பி பின்மண்டையிலடித்து
தர்க்கம் செய்ய வேண்டும்
நீங்கள் நீங்களாக இல்லாத சமயம்
நீங்கலாக
யாவும்
ஆட்டத்திலுண்டு
●●●
தயை கூடி..
அடைவதற்கு எளிதென முடியாது போன பதிலை
வேறெங்கோ தொலைவில்
காத்திருக்கும்படி
சொல்லியதோடல்லாமல்
எழும் சந்தேகங்களை கையிருப்பில் வைத்திருப்பதன்
பின்னணியில் உத்தரவாதமாய்
நானிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பின்போதும்
உன்னிடம் வெவ்வேறு வடிவத்தில் பொய்யை
வார்த்து கொடுத்திருக்கிறேன்
உனக்கென பேணும் தனிமைக்குள் இக்கணம்வரை
அதில் நீ கண்டதென்ன
மாயையைத் தொடுகின்ற கனவு விவரிப்பின்
மறுதலிப்போடு
அகாலங்களில் நாம் புதிய நடை பயின்றோம்
நகரத்தின் கசடு அத்தனையும் இழுவிய பாதைகளில்
அமைதியின்மை பெயர்ந்து துருத்திக்கொண்டு
கிடப்பதை
குரல் உயர்த்தாமல் எனக்கு மட்டும் கேட்கும்படி
சாடிக்கொண்டே வந்தாய்
இதுவரையிலான அர்த்தத்தை நெம்பி புரட்டும்போதெல்லாம்
பரஸ்பரம் அங்கீகரித்துவிட்ட உறவின் மென்மையில்
நம்மிடையே
ஓர் உரசல் உகுத்து அனல் பரவுவதாகவும்
சொல்லியிருந்தாய்
ஒப்புக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை
என்றுதான் உனக்கு எழுதியிருந்தேன்
அதற்குமொரு பதிலை
இப்போது நீ
யோசித்துக்கொண்டிருக்கிறாயா என்ன
●●●
உள்முகமற்று வெளியேறி..
பற்றிக்கொண்டிருக்கும் கை சூட்டில் மிருதுவாகி
குலைகிறது
பொழுது
அபகரித்துவிட்டு பறந்துகொண்டிருக்கும்
ரோதனையின் கூர் நகங்கள் விடப்போவதில்லை
சற்றுமுன் நம்மிடமிருந்த
நிம்மதியை
அறைக்குத் திரும்பியதும்
இன்மையிலிருந்து பெருகி வெறிக்கும் புதிர் கண்களில்
ஒரு சாவியைப் பொருத்திப் பார்க்கிறோம்
முணுமுணுத்தபடி திறந்துகொள்கிறது
இரவு