- இடிந்து சரியும் நிகழ்
நிரந்தரம்
இருப்பென்பதை
அசைத்துப் பார்த்திடும் கடப்பாறை
இந்நொடிக்குள் தொலைய
கதவடைக்கின்ற எதனோடும்
ஒரு முழங்கையளவு
தூரம் வகித்துக்கொள்கிறேன்
அந்தரத்தில் ஆடும் கேள்விக்குறிகள்
வளர்ந்து பெருகுகின்றன
பாதுகாப்பு பெட்டிக்குள்
அடைக்கலம் தந்திடும்
துயிலின் சாவியை
கையேந்துகிறது மனம்
சாட்சி சொல்ல மறுக்கிற
மூளையின் சிரிப்புக்கு
அகன்ற பற்கள்
உழன்று களைக்கிற உடலின்
தேய்மான நெடிக்குள் ஒளிந்திருக்கிறது
நிரந்தரமற்ற ஓட்டம்
°°°
- உதிரும் பொழுதுகள்
காலியான ஜாடிக்குள்
நிரம்பும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்
நசுங்கும் யோசனையை
ஊசிமருந்தில் திணிக்கும் குரல்கள்
சலிப்பூட்டுகிறது
அடித்து காலுடைக்க வேண்டும்
இல்லையேல்
இங்கிருந்து ஓட வேண்டும்
நொண்டிக்கால் அடித்து
வலம் வருகிறேன்
நீட்டிக்கும் காலத்திற்கான
மணித்துளிகள் எண்ணப்படுகிறது
மணல் கடிகாரத்தின் அரைவட்டத்தில்