01
வீடு திரும்பல்
சூன்யத்துள் அலைந்து திரிந்து
அலுத்த சுடர்
விளக்கேற்றும் போதெல்லாம்
திரி நுனியில் இளைப்பாற அமருகிறது
பசலையில் தவிக்கும் சூன்யம்
காற்றைத் தூதனுப்ப
அலைந்து அலைந்து சமரசம்
இவர்களின் ஊடலுக்கிடையில்
அலைவுறுகிறோம்
நானும்
அறையும்
சகலமும்
02
அற்பப் பிறவி
மென்தூரலாய்த் துவங்கி
அடைமழையின் சாயலை
வரிந்து கொண்டபோது
ஈரமாதலுக்குத் தயங்கி
எதிரெதிராய் அண்டி நின்றிருந்த
அத்தனை கண்களும்
நிலை கொண்டது
சாவதானமாய் நனைந்து கொண்டே நடந்த வீதியோர
நாயொன்றின் மீது
இருபுறமும் அப்போது அது
வீசிய பார்வை
சீ! தூரப்போ மனுஷா
என்றது போலிருந்தது.
03
ஓவியனின் மனக்குரல்
ஓவியப் பறவைக்கு
சிறகுகள் எதற்கு அநாவசியமாய்
சிந்திக்கிறான் சர்வாதிகாரி
சிறகுகளுக்கும் சேர்த்துத் தானே
பறவையென்ற பெயர்?
04
காற்றெனும் இசைஞன்
உடைகளைத் தோரணங்களாக்கி
தானொரு சிறுவனாகி
தாவித் தாவிக் கலைத்து விளையாடுகிறது
காற்று
மீட்டப்படும் ஊளை இசையின்
தாளத்திற்குத் தப்பாமல் தவித்தலைகின்றன விரல்கள்
அதனதனை அதனதன் இடத்தில் அமர்த்திட
கவிதைகள் நாலும் நல்லாயிருக்கு.
முதலாவது கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு