1
ஒளிந்து விளையாடுவது
எனக்குக் கொஞ்சம் பிடிக்கும்
உனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நாமிருவரும் நம் இருப்பில் இல்லாமல்
சிலகாலம் தலை மறைவாகிவிடுவோம்.
இடைப்பட்ட காலத்தில் திட்டிக்கொண்டே
என்னுடைய உருவத்தை
உன்னுடைய மனச்சுவற்றிலும்
உன்னுடைய உருவத்தை
என்னுடைய மனச்சுவற்றிலும்
தீட்டிக் கொள்வோம்.
வண்ணமும் எண்ணமும் வறண்டுபோகும் நாளில்
இருப்பைத் தேடி நாய்போல அலைவோம்.
இருண்ட வெளியிலிருந்து
தட்டுத் தடுமாறி இருப்பைக் கண்டடையும்போது
உயிர் பெறட்டும் அவ்விரு சித்திரமும்!
2
குடிசைக்குத் தீ மூட்ட
கூட்டமொன்று வருவதை
மூத்தோர் எச்சரித்தால்
முக்கியமான ஆவணங்களை எடுப்பதற்கு முன்
நீ வந்துபோன சுவடுகளை சேகரித்து
இரும்புப் பெட்டிக்குள்ளிட்டுப்
பத்திரப்படுத்தவே எண்ணுவேன்.
ஊர் கூடி பைத்தியக்காரி எனலாம்
ஒவ்வொருவருக்கும் ஒரு பைத்தியம்
எனக்கு உன் மேல் பைத்தியம் அவ்வளவே!
3
கதவைத் தட்டிய
காதல் அத்தனையையும்
நெட்டை குட்டை
கறுப்பு வெள்ளை
அறிவு மக்கு
அப்படி இப்படி
இப்படி அப்படியென
திருப்பி அனுப்பினேன்.
அவை முகத்தை சுழித்துக்கொண்டு
கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டாமல்
சிறுபெரு வட்டமாகவும்
வண்ணவண்ண பூக்களாகவும்
பச்சை பூசிய இலைகளாவும்
குட்டிக்குட்டி நட்சத்திரங்களாகவும் உருமாறின
அவை அனைத்தும்
நீருக்கு அஞ்சி ஓடவில்லை
நிலையாய் நின்றன வாசலிலேயே!