உயிரோட்டமாய்
ஒரு சிசுப் பிண்டம்
நீ பாதுகாக்கும் பொருட்டு
உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட
ஒர் வஸ்து…
நீயே குழந்தை யாதலால்
உன் வாகனத்திலிருந்தது
தூக்கி வீசப்படுவதாய்
கனாக் கண்டு
அதிர்ந்து எழாதே!
துன்பம் தவிர்க்கப்பட வேண்டியது..
அனுபவிக்கப்பட வேண்டியதல்ல..
விடியற் காலை துயிலெழ
அருகதை யற்றவன் நீ
உன்னிடத்திலிருந்து நீ
செய்யக் கூடியதை செய்த
தாய் மரணித்த பின்
அவள் மடியில் சாய்ந்து
கனவில் கிடப்பதாக
மூடிய இமைகளுக்குள்
கண்ணீர் சுரக்காதே!
துன்பம் உழன்று
வாடப்பட வேண்டியதல்ல..
தவிர்க்கப்பட வேண்டியது..
உன் இடக்கண் பார்வையில்
உணர்வுகளை செரிமானம்
செய்து கொண்டு
கிடந்திருந்தாள் ஒருத்தி
உன் தவறேது மில்லை
கண்ணும் கருத்துமாய்
கவனித்துக் கொண்டாய்
சிறியதாய் தொடங்கியதே;
புற்றாய் பரவியது
அப்பாவியவள்!
குடும்பத்திற்கு எல்லாமானவள்- துன்பம்
மென்று விழுங்கப்பட வேண்டியது..
கொண்டாடப்பட வேண்டியதல்ல..
மிச்சமிருப்பவர்களுக்காக
தின்று முழுங்கு!
கடக்க அதிக காலம் கிடக்கு….