கவுச்சி நனைத்த காகிதத்தில்
பழைய வார்த்தைகள்.
இருப்பதெல்லாம்
கைவிடப்பட்டவனின்
வாழ்க்கைக் குறிப்பு
அனலாய் தகிக்கும்
ஊர் நடுவே
அங்கிங்கொன்றாய்
பச்சை மலர்ந்து நிற்கும்
சஞ்சீவிமலைச் சாரல்
நெடுக ஊற்றுப் பாசன
உழவுக் காட்டை
வட்டமடிக்கின்றன
உள்ளூர் குருவிகள்.
துல்லியமாய் கணக்கிடும்
தூரத்துப் பஞ்சாலை
ஒலிக்கு மட்டை கம்பை
துடைத்து வைக்கும்
சித்தாள் சனங்களின்
பாத வெடிப்பெங்கும்
சன்னமான வெள்ளை மிளிர்கிறது
மின்னத் தெரியா
நட்சத்திரங்களின்
கும்மிருட்டுக் கதைகளை
மின்மினிப் பூச்சிகள்
விலா எலும்புடைத்து
வணைந்ததாக
சொல்லக் கேள்வி
ஊர்நடுவே சிலை வைத்துக்
கொடியேற்றி கோசமிடும்
வழக்கொழிந்த வீதியெங்கும்
நான் நடக்க விருப்பமென
என் நான்கு வரி கவிதை
அரைக்கம்பத்தில் அசைகிறது
அவ்வப்போது உரையாடும்
பறவைகளிடத்தில்
எம்கிளை யசைத்துவிடு
என்கிறது கல்சுமக்கும்
இசக்கியம்மன்
தொட்டில் சீலை
வெறிநீர் கடையருகே
சிறுநீர் சிற்றோடை
உப்பு கரிக்கிறது
மாதச் சம்பளம்
விடிவதும் அடைவதுமாய்
பினாமி முதலைகள்
தள்ளாடும் சமூகத்தை
தின்றுச் செரிக்கிறது
பாவம் நீர்க்காகம்
நிலம்பிடுங்கித் தின்றவன்
நகைப்பொலிக்கு
தனித்துவிடப்பட்ட
மலங்காட்டு முனியப்பனை
புத்தி பேதலித்தோர்
திட்டியபடி நின்றனர்
ஏழாம் பொருத்தமாய்
எங்கூர் வாசிகள்
வயல் நண்டு வலைதேடி
எந்தன்
காணி நிலம் பிய்த்து
உயிர் வளர்க்கும்
கங்காணி மக்கா
சஞ்சிக் கூலியாய்
கடல் கடந்தென்னை
கூட்டியெங்கே செல்கிறாய்
நானென்ன செய்யட்டும்
நாளை மாறுமென
நல்லுரை செய்தோரே
என்னை
இன்றென்ன செய்வதென
உத்தேசம்
எங்கூர் அடையாளமாய்
எஞ்சி நிற்பது
அய்யனார் கோவில் அருவி
பஞ்சு மார்க்கெட் நிறுத்தம்
நூற்பாலை பணியாட்கள்
குடைவரைவாசல் தெருக்கடை
கேசரி வடை பொட்டலங்கள்
பழைய பஸ் ஸ்டாண்டு பழச்சாறு
என்கிற அளவில் அப்படியே
அவளும் நானும்
எது எப்படியோ
அது அப்படித்தான்
இவையெல்லாம்
புரியாது போனால்
கைவிட்டவர்கள் நீங்களும் தான்