1) காளானும் உறவும்
மழைநேரத்து ஈரத்தில் முளைத்தாலும்
தோன்றிய நொடியில் மகிழ்ச்சியை
தருவதை அது அறிவதில்லை
வெம்மையின் சூட்டில் மடிந்தாலும்
நிழற்படமாய் நெஞ்சின் ஓரத்தில்
அமர்ந்துகொள்வதை அது உணர்வதில்லை.
சிலநாட்களில் இறந்துபோகும் அதற்கு
தான் உண்டாக்கிய மாற்றம்
ஒருபோதும் தெரியப்போவதுமில்லை
ஒரு சில உறவுகள் போல்.
2) இடைவெளிகள்
கண்ணீர் உகுக்கும் இரவை
பணியின் நிமித்தம் பிரிவை
இறப்பில் தோன்றும் வலியை
இரக்கமற்றுத் தருகிறது பரிசாக
புரிதலற்ற உறவிடம் தஞ்சம் புகுந்து
நேசிக்கும் நெஞ்சினுள் வஞ்சமாக நுழைந்து
ஒருவர் மனத்தில் என்றும்
தக்க வைக்கிறது இருண்மையை
மறுதலிக்கும் மனமுடையோரை
விரும்பி ஏற்கச் செய்து
கண்மூடிய பதுமை கைத்தராசு போல்
செயல்படுகிறது நியாயமின்றி
இடிந்த உள்ளத்தின் குட்டிச்சுவராய்
கோலேச்சும் இடைவெளிகள்
எப்போதும் விரும்பப்படுவதில்லை
எவராலும்.
3.அளப்பதும் அவரவர் நியாயமே
அழகு என்பதில் எவற்றை எல்லாம் அடக்குவது
முகத்தை வெளுக்கச் செய்யும் பூச்சுகளில்
உடுத்தும் நவீன ஆடைகளில்
நுனிநாக்கில் பேசும் மொழிகளில்
இவற்றில் எதில் அடக்குவது?
விடுதலை என்பதில் எவற்றை எல்லாம் இணைப்பது
எதிர்வாதம் புரிவதில்
கொள்கைகளை மறுப்பதில்
சீரழிவுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதில்
இவற்றில் எதில் இணைப்பது?
கொடை என்பதில் எவற்றை எல்லாம் நிரப்புவது
கொடுப்பதற்கு உயரும் கையில்
பெறுவதற்குத் தாழும் கையில்
கொடுப்பதையும் பெற்றதையும் காட்டும் ஒளிப்படங்களில்
இவற்றில் எதில் நிரப்புவது?
அவரவர் செய்யும் எதுவும் அவரவர்க்கு நியாயமே
அதை அளக்கும் கோலின் அளவும் அதுவே
இதில் எடுபடாமல் போகும் எவர் கருத்துமே.