ஆண் நியாயம்
வெள்ளிக் கம்பிகள் இழையோடும் கருத்த ஊசிகளால்
கோர்க்கப்பட்ட கூர்மையான முனைகளுடைய முடிகள் அவளுக்கு…
சந்தனத்தில் வெண்ணை குழைத்த
தளிரிளம் மேனிக்
குழந்தையவள்!
காரித் துப்பியதால் சிதைத்து விட்டேன்!
இது என் நியாயம்!
பிஞ்சுக் கைக்கால்கள்
அழுந்தக் பிடிக்க
ஒடிந்து விடும் தேகம்…
மார்புச் சுவரில் முலைகள்
முதிர்க்காத
பால்மணம் மாறாக் குழந்தையவள்!
எட்டியுதைத்ததால் அழித்து விட்டேன்!
இது என் நியாயம்!
களியாட்ட இடைவெளியில் துடிதுடித்து
வீலென்று தரையிலமர
சிவந்த இரேகையின் நேர்க்கோட்டில்
முள்ளேறி அவதிப்பட்டாள்!
என்ன ஆணவம்?
பற்கள் பதித்தாள்!
முள் எடுப்பதாய் பாவனை செய்து
நிரந்தர உளியை தைத்துவிட்டேன்!
இது என் நியாயம்!
உரு மாறும் உடற்பிணி
நேற்று அவன் வந்தான்
நாளை வாழ்வில்லை என்ற வகையில்
உழைத்தான்!
அவனுக்கொரு சான்றிதழளித்தோம்
இன்னும் உழைத்தான்
சிறு துண்டு அணிச்சல் ஊட்டினோம்
விட்டத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு அலுவலறையே வீடாயிருந்தான்
வீட்டை மறந்தான்
ஒரு நாள் அவன் கை மேசையிலிருந்து சரிந்தது
தலையும் தான்
அவனிடம் காலியானது
இப்போது நீ வந்திருக்கிறாய்!
வானம் பழையது
அன்று
நிலவின் குளிரும், சூரியனின் தகிப்பும்,
நட்சத்திரங்களின் ஒளிர்வும்
மேகங்களின் திரட்டும்,
உவமைகளாயின…
பின்னொரு காலத்தில்,
பறவைகளின் சீர்திரள் பயணமும்
பருந்துகளின் இரை கொத்துப்பார்வையும்
வௌவால்களின் முப்பரிமாண அனுபவமும்
ஒப்பீடுகளாயின…
அடுத்து வந்த காலத்தில்,
வான்வெளி நீராவிக்கோடுகளும்
விமானங்களின் மின்மினிச் சிமிட்டல்களும்
செயற்கைக் கோளில் சுற்றுவட்டப்பாதையும் கூட சமன்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன
தற்போது,
வானம் பழையதாக தோன்றுகிறது!
புதிதாகக் காண ஒன்றுமேயில்லை..!