கவித்துவம் என்பது ஒரு மனநிலை. இது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சிறு குழந்தைகளிடம், எளிய மனிதர்களிடம், நிறைய பெண்களிடம் இந்த மனநிலையை நான் பார்த்திருக்கிறேன். நல்ல கவிதை என்பது வேறொன்றுமில்லை, அது அந்த மனநிலையின் வெளிப்பாடு. ஒரு கவிதை என்பது அந்த கவித்துவ மனநிலையை மொழியின் மூலம் நிகழ்த்திக் கொள்வது. இதை எல்லோராலும் சரியாக வெளிப்படுத்திவிட முடியாது. அப்படி வெளிப்படுத்தி விடுபவர்களே கவிஞர்கள் ஆகிறார்கள். திருமதி. கங்கா பாஸ்கரன் தன்னுடைய நீராம்பல் தொகுப்பில் உள்ள கவிதைகளில் இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஒற்றைத் தருணத்தை , ஒரு காட்சியை அவர் கவிதைகளாக மாற்றியுள்ளார்.
குறியீடோ, படிமமோ அறியாத கவிதைகள் எனத் தன்னுடைய கவிதைகளை அவர் அறிமுகப்படுத்துகிறார். முன்னுரையே கவிதை ஆகிறது இந்த தொகுப்பில். அவரின் நீராம்பல் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் அகவயமானவை. கனிந்த மனமும்,சிறு புன்னகையும் ஊடாடும் கவிதைகள் இவருடையது. நெஞ்சத்து ஏக்கம் இவர் கவிதைகளின் சந்தமாகிறது .
தொடர்ந்து கவிதை வாசித்து வரும் ஒருவருக்கு ஒரு கவிதையை வாசித்தவுடனேயே அதை எழுதியது ஒரு ஆணா , பெண்ணா என்று சுலபமாக சொல்ல முடியும். காரணம் பெண்ணெழுத்தில் வெளிப்படும் அந்த கனிவு. பெண்ணெழுத்துப் புரட்சிப் பேசும். உரக்கப் பேசி உரிமைக்கு குரல் கொடுக்கும் .ஆனால் அதே பெண்குரல் மரத்திலிருந்து தலை மேல் உதிரும் ஒரு சிறுமலரைக் கண்டால் குழைந்துப் போகும். காற்றில் பறந்துச் செல்லும் ஒற்றைச் சிறகை பார்த்தால் கவிதை எழுதும்.
“ஒற்றைச் சிறகு பறக்கும் போதெல்லாம்
எங்கோ யாரோ ஒருவர்
தம் கவிதையால் அதனோடு
பறந்துக்கொண்டு இருக்கிறார்.
தனிமை துயரைத் தீர்க்கும்
அந்தச் சிறகு தன்னோடு
ஒரு கவிஞனை
ஒரு காதலியை
ஒருகாதலனை
ஒரு தாயை
ஒரு சிறுமியை
சுமந்துக்கொண்டு அலைவதை
நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?”
என்று பறக்கும் சிறகைப் பற்றி எழுதுகிறார்.
நீ எந்த உதவியும் செய்யத் தேவையில்லை.என் வாழ்வு என் இன்பம் என்கிறார்.
“மாகாளி மாரியம்மன் கொற்றவையென
கொண்டாடி தீர்த்து
உன் குலம் தழைக்கப்
படையிலிட்டதுப் போதும்
ஓடாத கால்கொண்டு
உயிர்த்து வரப் புறப்படுகிறேன்
வாழ்த்த வழியில் நிற்காதே.”
என்று கற்புகரசிகளின் பெயரால் தன்னை அடக்கி வைத்தவர்களை அலட்சியமாக இடது கையால் ஒதுக்கிச் செல்லுகிறது அவரெழுத்து. வாழ்த்தோ வசையோ தன்னை தானே அணைத்துக் கொள்ளுபவர்க்கு எதுவும் பொருட்டில்லைதானே.
உரக்கச் சண்டையிட்டால் பேசித் தீர்க்கலாம். பேசாமல் பழி வாங்குபவர்களை என்ன செய்வது? அன்பு கொண்டவர்களின் மௌனம் என்பது மிகப் பெரிய தண்டனை. அகிம்சையான வன்முறை.
“மௌனயுத்தம் நிகழ்த்தும்உன் போர்த்தந்திரம்
ஊடலின் இறுதி ஆயுதமானதே
ரணங்களாய் மாறிய உன் நிசப்தம்
உறிஞ்சும் குழாயாய் என் புன்னகையை
நித்தம் உறிஞ்சி வறண்ட மென்மையை
வடுவாய் விட்டுச் செல்கிறது.”
இப்பொழுது சொல்லுங்கள் இதை ஒரு பெண்ணால் தானே எழுத முடியும்.
இடைவெளி என்று ஒரு கவிதை. புரிதலுக்கும் குழப்பத்துக்கும் , எதிர்பார்ப்புக்கும் ஏக்கத்துக்கும் , கோபத்துக்கும் அன்புக்கும் , காதலுக்கும் காமத்துக்கும் இப்படி அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகளுக்கிடையே ஆன சிறு இடைவெளியைப் பற்றி பேசுகிறது. துள்ளும் மீனுக்கும் , தூண்டில் புழுவுக்கும் இடையிலான சிறு இடைவெளி ஒரு வாழ்வின் அளவு அல்லவா.
இந்த கவிதையில் கவிஞர் ,
“உனக்கும் எனக்கும் இடையில்
இடைவெளி குறைவுதான்
என்னை விட்டு விலகும் நொடியில்
நீ என்பது மரணித்து விடுகிறது.”
என்கிறார்.
உன்னை விட்டு விலகுகையில் நான் இல்லாமல் ஆகிவிடுகிறேன் என்பது தான் எல்லோரும் எழுதுவது. என்னை விட்டு விலகுகையில் நீ மரணித்து விடுகிறது என்னும் போது , நீ என்பது, இனி உன் நினைவு என்று சொல்வதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன் .
தொகுப்பின் தலைப்பாய் ஆகும் பெருமைப்பெற்ற இக்கவிதை, காத்திருப்பின் வலிகளை பேசுவது.
காதலில் காத்திருத்தல் சிலருக்கு சுகம். பலருக்கு வலி. சுகமோ ,துக்கமோ காத்திருக்கையில் மனம் கூடி இருந்த நொடிகளையே அசைப்போடும். காத்திருக்கையில் உடல் சிலையாகச் சமைந்திருக்க மனமோ நிலைக்கொள்ளாமல் அலையும். நொடிக்கு நொடி அணைக்கட்டில் உயரும் நீரின் மட்டம் போல் நினைவுகளின் மட்டம் உயர்கிறது. வெள்ளத்தனைய மலர்நீட்டம்…. நீராம்பல் மலர்கிறது. அமுதமே கொல்லும் விஷமாகலாம். நரகத்தின் வாயிலில் சொர்க்கம் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.
“காத்திருப்பின் கணங்கள்
நீளும்போதெல்லாம்
மனத்தின் கனம்
நீராம்பலைப் பூக்கச் செய்கின்றது.”
தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான காதல் கவிதைகள் பிரிவை, நிறைவேறா காதலைப் பேசுவன. இவ்வுலகில் பெரும்பாலான காதல்கள் நிறைவேறாதவை, அதனாலேயே சாகாவரம் பெற்றவை, இதற்குத்தானா என்ற சலிப்பை ஏற்படுத்தாதவை. இவ்வுலகின் நிறைவேறா காதலெல்லாம்தான் இரவில் வானில் நட்சத்திரங்களாய் ஒளிர்பவை . பிரிவைப் பாடாத கவிஞரும் உளரோ. நெய்தல், நீங்கவோ நீக்கவோ இயலாத தோல்வி , அறையப்பட்ட நினைவுகள் என அழகழகாய்க் கவிதைகள். கரைமோதும் அலைகளில் கால் நனைத்து நிற்பதாய் இயல்பாய் பிரிவை கடந்து செல்லும் கவிதைகள்.. அவற்றில் சோகமோ,புலம்பலோ இல்லை.
“உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.”
உண்ணும் போது மட்டுமே இன்பம் தரக்கூடியது கள். காதலோ நினைக்குந்தோறும் இன்பத்தை அளிப்பது என்பது ஐயனின் வாக்கு. திருமதி. கங்காவின் கவிதைகள் நினைவுகள் தரும் இன்பத்தை பாடுவன.
எங்கேயோ கேட்ட குரலைத்தேடி தெருவெங்கும் அலையும் கவிதைகளில் சங்ககாலத் தலைவியின் குரல். வெள்ளிவீதியையே எத்தனை நாட்கள் படிப்பது, இனி கங்காக்களையும் படிப்போம் .
இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘அவளும் நானும்’ என்ற கவிதை. .
“என் மகளிடம் என் சாயல்
இல்லையென்பதே
ஆசுவாசமாக இருக்கிறது
பீறிட்டு எழும் மகிழ்ச்சியிலும்
குமுறும் உள்ளத்துடிப்பிலும்
பொங்கும் கண்ணீர்த் துளிகளிலும்
சிவக்கும் முகக்குறிப்பிலும்
அவள் நானில்லை என்பதே நிதர்சனம்….
என்னிலிருந்து நெடுந்தூரம்
சென்றவளின் பாதச்சுவடுகளில்
நானில்லை என்பதே வாழ்வு.”
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் ஒரு ஆணால் இப்படி சொல்ல முடியுமா? இது தான் பெண் மனம். தன்னைவிட தன் மகள் தெளிவும் அறிவும் தைரியமும் ஞானச்செருக்கும் ரசனையும் அதிகம் உடையவளாக விளங்குகிறாள், என்பதில் ஆசுவாசம் அடைவது தானே தாய்மனது. தன் மகள் கரையேறிவிடுவாள் என்ற எண்ணம் கொடுக்கும் நிம்மதி அவள் தன்னைப்போல் இருப்பதினால் வரும் பெருமிதத்தைவிட பெரிதில்லையா?
நீலநிற மொழிகள், நெஞ்சை நனைக்கும் இன்ஸ்டா, மடநெஞ்சு, மீச்சிறு சொல் என வாட்ஸ்அப், முகநூல் போன்ற தற்கால பாடுப்பொருள்களை கொண்ட கவிதைகளும் உண்டு. ரசனையான கவிதைகள்.
தேநீரதிகாரம் என்று தனியாய் அதிகாரம் பிரிக்கலாம்,அத்தனை தேநீர் கவிதைகள். ஒரு கோப்பை தேநீர் என்ன செய்யும், பறக்க பறக்க பரிமாறிய சொற்களை உதிர்த்துச் செல்லும், இரவின் இடைவிடாத உரையாடல்களை மீட்டுத்தரும், நினைவுக்குளங்களில் கல்லெறியும், இன்னுமென்னென்ன செய்யும், கவிஞரிடம் கேளுங்கள், அவர் சொல்வார் தேநீர் என்பது மறுக்க முடியா திரவமென.
“நாளைய பொழுது நம் கையில் இல்லை
என்றப்போதும் அலாரம் வைக்க
மறப்பதில்லை நாம்.
கடந்தசெல்லும் பேருந்தின் சன்னலின்
ஓரப்பார்வைக்காக ஒற்றைக்காலில்
தவமிருக்கும் மரங்கள்.”
சற்றே ஜென் வாசனையடிக்கும் குட்டி கவிதைகள் அருமை.
கவிதை பேசப்பேச விரிவது. ஆனால் எவ்வளவு பேச வேண்டும் , எப்படி பேசவேண்டுமென்பது கயிற்றின் மேல் நடப்பதைப்போன்று நுட்பமானது. கவிதையை மிகையாக விவரித்து,வாசகனின் மனத்தில் திறக்கும் ரசனை என்னும் வாயிலை அடைத்து விடக்கூடாது. நான் இந்த கட்டுரையை அலசும் நோக்கிலோ, ஆய்வு நோக்கிலோ எழுதவில்லை முழுக்க ழுழுக்க ரசனை அடிப்படையிலேயே எழுதினேன். கவிஞர் கங்கா பாஸ்கரனின் மொழி எளிமையானது, அலங்காரங்கள், மேல்பூச்சுகள் ஏதுமற்றது. அவர் கவிதைகளில் மொழி வளைந்து வளைந்து தன்னைத்தானே சித்திரமாய் வரைந்து செல்கிறது. இவர் கவிதைகள் மயிற்பீலியால் தீட்டப்பட்ட எளிய மொழியின் சித்திரங்கள். கவிஞருக்கு வாழ்த்துகள்.
நூல்: நீராம்பல்
ஆசிரியர்: கங்கா பாஸ்கரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை : ₹ 100
அன்பும் நன்றியும் திருமதி ரேவதி, தோழர் சந்தோஷ்❤️